தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பு உறுதிபடுத்தப்படாமலேயே இருந்து வந்தது. இதனிடையே கடந்த ஜூன் 20-ந் தேதி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் உள்ள தோப்பூரில் அமைய இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள மதுரையில் ரூ.1,264 கோடி மதிப்பீட்டிலும், தெலங்கானா மாநிலத்தில் பீபீ நகரில் ரூ.1,028 கோடி மதிப்பீட்டிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள்அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.