This Article is From Oct 08, 2019

இந்திய விமானப்படை தினம்: விமானத்தில் சாகசம் செய்தார் அபிநந்தன்!

இந்திய ராணுவத்தின் முப்படைகளில் ஒன்றான விமானப் படை, உலக அளவில் சக்தி வாய்ந்த படைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது.

Air Force Day 2019: இன்று இந்திய விமானப்படையின் 87வது தினம் கொண்டாடப்படுகிறது.

New Delhi:

இந்திய விமானப்படையின் 87வது தின கொண்டாட்டத்தில் விமானத்தை இயக்கி சாகசத்தில் ஈடுபட்டார் பாலகோட் தாக்குதல் ஹீரோ அபிநந்தன்.

இந்திய ராணுவத்தின் முப்படைகளில் ஒன்றான விமானப் படை, உலக அளவில் சக்தி வாய்ந்த படைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இதனை அடுத்து  ஒவ்வோரு ஆண்டும் அக்டோபர் 8ந்தேதி இந்திய விமான படை தினம் கொண்டாடப்படுகிறது. 

அந்த வகையில், இந்திய விமானப்படையின் 87ஆவது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக விமானப்படை சார்பில் உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் பகுதியிலுள்ள ஹிந்தான் தளத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, மறைந்த விமானப்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து, விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு, கண்கவர் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முப்படைத் தளபதிகளும் பங்கேற்றனர். பாகிஸ்தானின் விமானத்தை வீழ்த்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் மிக் - 21 ரக போர் விமானத்தை இயக்கினார். அவருடன் 3 மிராஜ்-2000 ரக விமானம் மற்றும் 2 எஸ்.யூ-30எம்கேஐ ரக விமானம் அவெஞ்சர் அணிவகுப்பை விமானப்படையினர் நடத்தி காட்டினர். 

தொடர்ந்து, இந்த இரண்டு படைப்பிரிவுகளுக்கும் வீர தீரச்செயல்களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பாராட்டு சான்றிதழை படைப்பிரிவின் கட்டளை அதிகாரிகளிடம் விமானப்படை தளபதி பதாரியா வழங்கி கவுரவித்தார். ஐந்து துணிச்சலான விருது பெற்றவர்கள் மூன்று மிராஜ் 2000 விமானிகள் மற்றும் இரண்டு எஸ்.யூ-30 எம்.கே.ஐ. விமானிகள் ஆவர்.

இந்த விழாவில் பேசிய தலைமைத் தளபதி ராகேஷ் குமார்சிங், விமானப்படை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு நன்றி. எந்த விலை கொடுத்தாலும் இந்திய வான் வெளியின் இறையாண்மையை காப்போம். நம்முடைய தேச நலனை காக்கும் பணியில் எல்லா நிலைகளிலும் செயலாற்றுவோம் என நாட்டுக்கு நான் உறுதி அளிக்கிறேன் என்றார். 

முன்னதாக, பாகிஸ்தான் இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்திய புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை வீரர்கள் பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாதக் குழு ஜெய்ஷ்-இ-முகமதுவின் முகாமில் தாக்குதல் நடத்தினர். அப்போது பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை தாக்கி அழித்தார் அபிநந்தன். அப்போது எதிர்பாராதவிதமாக பாகிஸ்தான் படையிடம் சிக்கி பின்னர் விடுவிக்கப்பட்டார்.
 

.