கேரளா விமான விபத்து; மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை!
Kozhikode, Kerala: கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் டேபிள் டாப் ஓடுபாதையில் இருந்து நேற்று மாலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மாநில சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, அவர் கூறும்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மீட்பு பணிகளில் பங்கேற்றவர்களின் பட்டியலை மாநில சுகாதாரத் துறை தயாரித்து வருகிறது. "மீட்பு முயற்சிகளில் ஈடுபட்ட அனைவரும் மாநில சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்காக, கட்டணமில்லா எண்களையோ - 1056, 0471 2552056; அல்லது கட்டுப்பாட்டு அறை எண்களையோ - 0483 2733251, 2733252, 2733253, 0495 2376063, 2371471, 2373901, தொடர்புகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
2 விமானிகள், 4 விமானக்குழுவினர் மற்றும் 10 குழந்தைகள் உட்பட 184 பேர் விமானத்தில் இருந்துள்ளனர். இதில், காயமடைந்த 127 பேர் கோழிக்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 13 மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், விமானத்தில் பயணித்த பலர், கொரோனா தொற்று காரணமாக தங்களது வேலைகளை இழந்து தாயகம் திரும்பியுள்ளனர்.
தொடர்ந்து, இன்றைய தினம் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஏர் இந்தியா தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜீவ் பன்சால், மத்திய அமைச்சர் முரளிதரன் ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.