This Article is From Jul 23, 2020

ஏர் இந்தியா ஊதியக் குறைப்பு ‘தீவிர’ நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்: விமானிகள் வலியுறுத்தல்!

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சுமார் 70,000 கோடி ரூபாய் கடன் உள்ளது.

சீனாவின் உஹான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சிக்கிய இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் சென்றது

ஹைலைட்ஸ்

  • ஏர் இந்தியா நிறுவனம் கடனில் தத்தளித்து வருகிறது
  • ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு முயன்று வருகிறது
  • இதுவரை யாரும் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க முன்வரவில்லை
New Delhi:

ஏர் இந்தியா நிறுவனம், தனது ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு செய்ய உள்ளதாக சமீபத்தில் அறிவித்தது. இந்த முடிவானது, மிகச் சிக்கலான, தீவிர நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்து நிறுவனத்தின் 60 விமானிகள், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவத் தொடங்கியதை அடுத்து, வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க ‘வந்தே பாரத்' திட்டம் வடிவமைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை, ஏர் இந்தியா விமானங்கள் மூலம்தான் மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. 

இப்படியான சூழலில் ஏர் இந்தியாவின் ஊதியக் குறைப்பு, தங்களின் வாழ்க்கையில் ஏற்படுத்த உள்ள பாதிப்புகள் குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்திப் புரிக்கு கடிதம் எழுதியுள்ளனர் அந்நிறுவன விமானிகள். 

“வந்தே பாரத் திட்டத்துக்காக, அந்தத் திட்டத்தின் முன்னணியில் நின்றவர்கள் மிகப் பெரிய விலையைக் கொடுத்தார்கள். இந்நாள் வரை வந்தே பாரத் திட்டத்தில் ஈடுபட்ட விமானிகளில் குறைந்தபட்சம் 60 விமானிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இப்படியான சூழலில் மத்திய அரசு, ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களுக்கு சுமார் 75 சதவீதம் வரையிலான ஊதியக் குறைப்பை அறிவித்துள்ளது. இது விமானிகளின் குடும்பங்களில் மிகச் சிக்கலான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். 

அரசின் இந்த முடிவானது பாரபட்சமாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் உள்ளது. இந்த முடிவால் ஊழியர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள். அது மிகத் தீவிர நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். இதைக் கடந்த கால செயல்பாடுகளும் உணர்த்தியுள்ளன” என்று விமானிகள் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சுமார் 70,000 கோடி ரூபாய் கடன் உள்ளது. இதனால் அந்நிறுவனத்தை விற்க மத்திய அரசு வெகு நாட்களாக முயற்சித்து வருகிறது. ஆனால், இதுவரை நிறுவனத்தை வாங்க யாரும் முன் வரவில்லை. 

சீனாவின் உஹான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சிக்கிய இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் சென்றது. இப்போதும் உலகின் பல மூலைகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா நிறுவனம் ‘வந்தே பாரத்' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 

இதுவரை இந்தத் திட்டத்தின் மூலம் உலகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து 7,73,000 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். 

ஏர் இந்திய சம்பளக் குறைப்பு அறிவிப்பு பற்றி சில நாட்களுக்கு முன்னர் பேசிய அமைச்சர் புரி, “ஏர் இந்தியா நிறுவனம் தொடரந்து இயங்க வேண்டுமா அல்லது சம்பளம் வேண்டுமா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். ஏர் இந்தியா நிறுவனம் மூடப்பட்டால் யாருக்கும் வேலை இருக்காதுதானே?” என்று கருத்து தெரிவித்தார். 

நிதி நெருக்கடி அதிகரித்ததால், சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவனம், தங்கள் ஊழியர்களின் பலரை, சம்பளமில்லாமல் விடுப்புக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பியது. சில ஊழியர்களுக்கு சுமார் 5 ஆண்டுகள் சம்பளமில்லாமல் விடுப்பில் அனுப்பியது ஏர் இந்தியா. இது தற்போதைய கொரோனா காலக்கட்டத்தில் ஊழியர்களுக்கும் தங்களுக்கும் சாதகமான நிலை என்றது ஏர் இந்தியா நிறுவனம். 

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதை அடுத்து விமானப் போக்குவரத்துத் துறை மிகவும் பாதிக்கப்பட்டது. இந்தியாவிலும் உலக அளவிலும் உள்ள பல விமான நிறுவனங்கள் இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க சம்பளக் குறைப்பு, ஊதியமில்லா விடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றை அமல் செய்துள்ளன. 

.