This Article is From Aug 08, 2020

கோழிக்கோடு ‘டேபிள் டாப்’ ரன்வே பாதுகாப்பற்றது என 9 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்த வல்லுநர்கள்!

Kozhikode Plane Crash: விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 2 பைலட்டுகள் மற்றும் 5 விமானக் குழுவினர் இருந்துள்ளனர். 

கோழிக்கோடு ‘டேபிள் டாப்’ ரன்வே பாதுகாப்பற்றது என 9 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்த வல்லுநர்கள்!

Plane Crash in Kozhikode: கோழிக்கோட்டில் இருப்பது ஒரு ‘டேபிள் டாப்’ விமானம் நிலையம் என்பதனால், பல சர்வதேச விமான நிறுவனங்கள், மிகப் பெரும் விமானங்களான போயிங் 777, ஏர்பஸ் 330 போன்றவற்றை இயக்குவதை நிறுத்தின. 

New Delhi:

துபாயிலிருந்து கேரளாவுக்கு 190 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நேற்று இரவு ரன்வே பகுதியிலிருந்து வழக்கிச் சென்று விபத்துக்கு உள்ளானது. கோழிக்கோடு விமான நிலையத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் விமானம் தரையிறங்கியுள்ளது. 

இந்நிலையில் விமானங்கள் தொடர்பான FlightRadar24 என்னும் இணையதளம், ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னர் பல முறை வட்டமடித்துள்ளது. இரு முறை தரையிறங்க முயன்றுள்ளது' என்கிற அதிர்ச்சித் தகவலை தெரிவிக்கிறது. 

கோழிக்கோடு விமான நிலையம், ‘டேபிள் டாப்' விமான நிலையம் என்று சொல்லப்படுகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், டேபிள் டாப் விமான நிலையத்தின் ரன்வே, மலை மீதோ, உயரமான பகுதி மீதோ இருக்கும். ரன்வே தாண்டி சென்றால் பள்ளம் இருக்கும். இதைப் போன்ற விமான நிலையங்களில் விமானங்களைத் தரையிறக்குவது சவாலான காரியமாகும்.

IX 1344 என்ற எண் கொண்ட அந்த விமானத்தின் இரு விமானிகளும் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 18 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிகிறது. விமானம் விபத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அதிலிருந்த அனைத்துப் பயணிகளும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த விபத்தினால் சுமார் 50 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 2 பைலட்டுகள் மற்றும் 5 விமானக் குழுவினர் இருந்துள்ளனர். 

விபத்து பற்றி பயணிகள் போக்குவரத்து இயக்குநரகமான டிஜிசிஏ, “கோழிக்கோடு விமான நிலையத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கிய பின்னர், ரன்வேயிலிருந்து வழக்கிச் சென்று பள்ளத்தாக்கில் விழுந்து, இரண்டு துண்டுகளாக உடைந்துள்ளது” எனக் கூறியுள்ளது. 

கோழிக்கோட்டில் இருப்பது ஒரு ‘டேபிள் டாப்' விமானம் நிலையம் என்பதனால், பல சர்வதேச விமான நிறுவனங்கள், மிகப் பெரும் விமானங்களான போயிங் 777, ஏர்பஸ் 330 போன்றவற்றை இயக்குவதை நிறுத்தின. 

இப்படியான சூழலில் விமானப் பாதுகாப்பு வல்லுநரான கேப்டன் மோகன் ரங்கநாதன், “கோழிக்கோடு விமான நிலையம், விமானங்கள் தரையிறங்குவதற்குப் பாதுகாப்பானது இல்லை என்பதை 9 ஆண்டுகளுக்கு முன்னரே அறிக்கை மூலம் கூறியிருந்தேன்.

அதன் ரன்வேவை அடுத்து, பள்ளத்தாக்கு உள்ளது. பாதுகாப்புப் பகுதியே கிடையாது. இது குறித்து எச்சரித்து ஆதாரங்கள் சமர்பித்தோம். இருந்தும் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து விமானங்கள் இயக்கப்பட்டன. 2020 ஆம் ஆண்டு, சில விமான நிலையங்களில் விபத்துகள் நடக்க வாய்ப்பிருப்பதாக கணித்திருந்தேன். அதில் கோழிக்கோடு ஏர்போர்ட்டும் ஒன்று. ரன்வேயின் இரு பக்கங்களிலும் 200 அடி பள்ளம் உள்ளன. விமான நிறுவனங்கள், கண்ணை மூடிக் கொண்டு அங்கு தங்கள் விமானங்களை இயக்கி வந்துள்ளன. 

இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றால், அது கொலைக்குச் சமம். கிரிமினல் குற்றமாகும்” என்று கொதிப்புடன் விளக்குகிறார். 

அதே நேரத்தில் திருவனந்தபுரம் எம்பி சசி தரூர், “கோழிக்கோடு விமான நிலையம் எந்த விதத்திலும் சிறியது கிடையாது. பல சர்வதேச விமானங்கள் அங்கு வந்து செல்கின்றன. அங்கு மிக நீளமான ரன்வே உள்ளது” என்கிறார். மேலும், இந்த விபத்து மிகத் தீவிரமான வானிலை மாற்றங்களால் நடந்துள்ளது என்கிறார். 


 

.