This Article is From Jul 11, 2018

21,000 கோடிக்கு 19 விமானங்களை வாங்குகிறது விஸ்டாரா நிறுவனம்

இந்திய உள்நாட்டு விமான சேவை நிறுவனமான, விஸ்டாரா புதியதாக 19 ஏர்பஸ் மற்றும் போயிங் விமானங்களை வாங்க இருப்பதாக அறிவித்துள்ளது

21,000 கோடிக்கு 19 விமானங்களை வாங்குகிறது விஸ்டாரா நிறுவனம்
New Delhi:

இந்திய உள்நாட்டு விமான சேவை நிறுவனமான, விஸ்டாரா புதியதாக 19 ஏர்பஸ் மற்றும் போயிங் விமானங்களை வாங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மொத்த விலை 3.1 பில்லியன் டாலர்களாகும் (இந்திய மதிப்பில் 21,334 கோடி ரூபாய்). அந்நிறுவனத்தின் தொழில் விரிவாக்கம் மற்றும் சர்வதேச விமான சேவையின் தொடக்கத்தை மனதில் வைத்து இந்த முதலீடு செய்யப்படுவதாக விஸ்டாரா தெரிவித்துள்ளது.

தற்போது, 21 ஏ320 நியோ விமானங்களை வைத்துள்ள விஸ்டாரா, மேலும் 50 விமானங்களை தனது படையில் சேர்க்க உள்ளது. 13 ஏர்பஸ் ஏ320 மற்றும் ஏ321 நியோ விமானங்களை வாங்க ஏர்பஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், 32 புதிய ஏ320 நியோ விமானங்களை ஒத்திக்கு எடுக்க உள்ளதாகவும் விஸ்டாரா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAP 1-A வகை இன்ஜின்கள் கொண்ட ஏ320 நியோ விமானத்தை வாங்க விஸ்டாரா முடிவு செய்துள்ளது. இந்த விமானங்கள் 2019-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டுக்குள் விஸ்டாராவிடம் ஒப்படைக்கப்படும்.

போயிங்க் நிறுவனத்துடன் ஆறு 787-9 டிரீம்லைனர் விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், 4 விமானங்களை வாங்கும் உரிமத்தையும் பெற்றுள்ளது.

போயிங்கிடம் பெறும் விமானங்களுக்கு, GEnx-1B இன்ஜின்களை தேர்வு செய்துள்ளது விஸ்டாரா.

விஸ்டாரா, டாட்டா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் விமான சேவை நிறுவனம். தற்போது 22 இடங்களுக்கு, வாரம் 800 விமானங்கள் பயணங்களை இயக்குகின்றது.
 

.