சிதம்பரத்திற்கு எதிராக ஜூலை 19-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது சிபிஐ.
New Delhi: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 19-ம் தேதி குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை பொறுத்தவரையில், கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது மேக்சிஸ் நிறுவனமானது ஏர் செல் நிறுவனத்தில் ரூ. 3,500 கோடி அளவுக்கு முதலீடு செய்தது. அப்போது ப. சிதம்பரம்தான் மத்திய நிதியமைச்சராக இருந்தார். இந்த முதலீடு தொடர்பாக மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறப்படவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு. அதாவது இந்த முதலீடு செய்யப்படுவதற்கு சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உடந்தையாக இருந்தார் என புகார்கள் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதோடு, அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தியது. இதுதொடர்பாக கடந்த ஜூலை 19-ம் தேதி குற்றப்பத்திரிகையை சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வழங்குமாறு சிபிஐ அதிகாரிகள் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி சிபிஐ -க்கு 6 வார கால அவகாசம் அளித்தனர். வழக்கு விசாரணை அடுத்த மாதம் 26-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.