New Delhi: ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், டெல்லி நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை விசாரிப்பதற்கான ஒப்புதலைப் பெற இரண்டு மாதங்கள் சிபிஐ-க்கு அனுமதி அளிக்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளது.
ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம், சில அரசு அதிகாரிகள் மற்றும் 6 நிறுவனங்கள் மீது கடந்த 19 ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சோனியா மாதூர், ‘சம்பந்தப்பட்ட நபர்கள் மீது விசாரணையைத் தொடங்க சில அமைப்புகளிடமிருந்து முறைப்படி ஒப்புதல் பெற வேண்டும். அதற்கு கால அவகாசம் வேண்டும்’ என்று கூறினார். அதற்கு நீதிபதி ஓ.பி.சைனி, 2 மாதம் கால அவகாசம் கொடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு, மொரீஷியஸின் குளோபல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் (மேக்சிஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனம்) இந்தியாவில், ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்ய அனுமதி கோரியிருந்தது. இதற்கான அனுமதியை, பொருளாதார விவகாரங்களுக்கான கேபினெட் கமிட்டி தான் தர வேண்டும். ஆனால் நிதி அமைச்சகத்திடம் இருந்து அனுமதி வழங்கப்பட்டது. அப்போது நிதி அமைச்சராக இருந்தது ப.சிதம்பரம். இதுதான் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காரணமாக இருந்தது. ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்திலும், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கிலும் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.