இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது
ஹைலைட்ஸ்
- சிபிஐ, அமலாக்கத்துறை இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளன
- சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கைதுக்கான தடை உத்தரவு பிறப்பித்துள்ளது
- ப.சிதம்பரம், நிதி அமைச்சராக இருந்தபோது நடந்ததுதான் இந்த விவகாரம்
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த நீதிமன்றம் இன்று, ‘ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கிறோம்' என்று உத்தரவிட்டுள்ளது.
மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில், ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தார். அப்போது 2006-ம் ஆண்டு மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேசன் சர்வீசஸ் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது.
இந்த முதலீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழுவின் அனுமதியை பெறாமல், விதிமுறைகளை மீறி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் மூலம் ப.சிதம்பரம் அனுமதி அளித்து விட்டார் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த அனுமதியைப் பெறுவதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர்கள் மீது சி.பி.ஐ மற்றும் மத்திய அமலாக்கத் துறை தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
முன்னதாக ஜனவரி 11 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பு, ‘மத்திய அரசு ப.சிதம்பரம் உட்பட 5 முக்கிய பொறுப்பில் இருந்தவர்களை விசாரிக்க அனுமதி கொடுத்துள்ளது' என்று கூறியிருந்தது. இதையடுத்து சிதம்பரம் கைது செய்து விசாரிக்கப்படுவார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
இந்நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போதுதான் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி வரை சிதம்பரம் மட்டும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)