அரசின் உத்தரவுப்படி டெல்லியில் மொபைல் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.
New Delhi: டெல்லியில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் மொபைல் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் பலர் புகார் தெரிவித்த நிலையில், இதற்கு மத்திய அரசின் உத்தரவே காரணம் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியின் சீலாம்பூர் மற்றும் பிரிஜ்புரி ஆகிய இடங்களில் ஏற்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதன் தொடர்ச்சியாக டெல்லியின் பரபரப்பு நிறைந்த ஐ.டி.ஓ. பகுதியில் மொபைல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர். இதற்கு ஏர்டெல் நிறுவனம் அளித்துள்ள பதிலில், ‘அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில், வாய்ஸ், இன்டர்நெட், எஸ்.எம்.எஸ். சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அரசு மறு உத்தரவிட்டால், எங்களது சேவை மீண்டும் முழு வீச்சில் தொடங்கும். வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். உங்கள் ஆதரவுக்கு நன்றி' என்று தெரிவித்துள்ளது.
ஏர்டெல் வாடிக்கையாளர் டேனிஷ் கான் என்பவர் எழுப்பிய கேள்விக்கு ட்விட்டரில் ஏர்டெல் இவ்வாறு பதில் அளித்திருக்கிறது.
மத்திய டெல்லி பகுதியிலும் இதேபோன்று மொபைல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கும் மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என்று ஏர்டெல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதை, 1975-ல் இந்திரா காந்தி ஏற்படுத்தி எமர்ஜென்ஸியுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. அந்த நேரத்தில் அரசை விமர்சித்தவர்கள் சிறையில் தள்ளப்பட்டனர்.
இன்று மதியம் டெல்லி செங்கோட்டை அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக செயற்பாட்டாளர்களான ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ் உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் குதிக்க தயாராக உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மண்டி ஹவுஸ், டெல்லியின் பிரபல பகுதிகள், போராட்டம் நடைபெறும் என கருதப்படும் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். பல இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்திலிருந்து மத பாகுபாடு காரணமாக அச்சுறுத்தப்பட்டு அகதியானவர்களுக்கு குடியுரிமை சட்டம் இந்திய குடியுரிமை வழங்குகிறது. இதில் முஸ்லிம்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது பாகுபாடு காட்டும் செயல் என்றும், அரசியலமைப்பு எதிரான செயல் என்றும் கூறி நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.