ராஜினாமா செய்வதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அஜய் மாகென் சந்தித்து பேசினார்.
New Delhi: டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அஜய் மாகென் ராஜினாமா செய்திருக்கிறார். அவருக்கு மத்திய காங்கிரஸில் முக்கிய பதவி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் வருவதையொட்டி அஜய் மாகென் பொறுப்பு மாற்றம் செய்யப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பாக அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். உடல்நல குறைவு காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் நேரத்தில் அவரது பங்களிப்பு தேவைப்படும் என்பதால், மாநில தலைவர் என்ற பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மத்திய காங்கிரசில் முக்கிய பதவி அளிக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.
2 முறை எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் மாகென் பதவி வகித்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மியிடம் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்த பின்னர், அப்போது தலைவராக இருந்த அரவிந்தர் சிங் லவ்லி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மாகென் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு மாகென் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில்தான் அவரது ராஜினாமா நிகழ்ந்திருக்கிறது.