துணைமுதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார் அஜித்பவார் (File)
Mumbai: மகாராஷ்டிராவில் பாஜக முதல்வர் பொறுப்பேற்ற 4 நாட்களில் ஆட்சி கவிழ்ந்த நிலையில், பாஜக ஆட்சி அமைக்க உதவியாக இருந்த உறவினர் அஜித் பவாரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் மன்னித்து விட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் நவாப் மாலிக் கூறியதாவது, "இறுதியில், அஜித் பவார் தனது தவறை ஒப்புக்கொண்டார், இது ஒரு குடும்ப விஷயம், பவார் சாஹிப் அவரை மன்னித்துவிட்டார். கட்சியின் மீதான அவரது நிலைப்பாடு இன்னும் மாறவில்லை" என் மாலிக் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் பெரும்பான்மயை நிரூபிக்க கோரி உத்தரவிட்டதை தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்ற 80 மணி நேரத்தில் அஜித்பவார் தனது பதவியை ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்த ஒருசில நிமிடங்களில் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸூம் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க தங்களுக்கு போதிய பலம் இல்லை என்பதையும் பாஜக ஒப்புக்கொண்டது.
இதனிடையே, கடந்த ஞாயிறன்று அஜித்பவார் தனது ட்வீட்டர் பதிவில், விரைவில் சரத்பவாரும் பாஜக கூட்டணியில் இணைவார் என்று தெரிவித்திருந்தார். இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த சரத்பவார், பெய்யான தகவல்களை அஜித்பவார் கூறிவருவதாகவும், கட்சிக்குகள் குழப்பத்தை ஏற்படுத முயற்சிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, மகாராஷ்டிராவில் எதிர்பாராத அரசியல் திருப்பமாக ஆட்சியமைத்த பாஜகவுக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், திடீரென ஆட்சி அமைப்பது, ஜனநாயக விரோதமானது என்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் தெரிவித்திருந்தன.
இந்த வழக்கு விசாரணையில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை தங்களுக்கு இருப்பதாகவும், துணை முதல்வராக பதவியேற்றுள்ள அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 54 எம்எல்ஏக்கள் உட்பட 170 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டதன் அடிப்படையிலே ஆளுநர் பகத்சிவ் கோஷ்யாரி தேவேந்திர ஃபட்னாவிஸை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் என்று மத்திய அரசு தரப்பு தெரிவித்திருந்தது.
இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கியது. அதில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க காலதாமதம் ஆனால், குதிரை பேரத்திற்கு வாய்ப்பு உள்ளதால் ஜனநாயகத்தை காக்கும் கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது. இதுபோன்ற நேரத்தில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதே சரியானதாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.