சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார்.
Mumbai: மகாராஷ்டிராவின் சட்டமன்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து அஜித் பவாரை அதிரடியாக நீக்கி கட்சியின் தலைவர் சரத் பவார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக இன்று காலையில் பாஜக - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் திடீர் கூட்டணி அமைத்து ஆட்சியை ஏற்படுத்தின. முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவீசும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த நிலையில், இன்று ஏற்பட்ட அரசியல் திருப்பங்களுக்கு அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவே காரணம் என்று சரத் பவார் மற்றும் சிவசேனா கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆட்சியமைப்பதற்கு முன்பாக தனது கட்சியின் 54 எம்எல்ஏக்களுடைய ஆதரவு கடிதத்தை அஜித் பவார் கவர்னர் கோஷ்யாரியிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரை சட்டமன்ற கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைவதற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தீவிர முயற்சிகளை முயற்கொண்டார். இதற்கு பக்கலமாக செயல்பட்டவர் அஜித் பவார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவும்கூட, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தியபோது, அஜித் பவார் உடன் இருந்தார். அவரது உடல் அசைவுகள் தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியிருக்கிறார். கூட்டத்திற்கு பின்னர் அஜித் பவாரை தொடர்பு கொண்டபோது, அவரது போன் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது என்று சஞ்சய் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.
சரத் பவாரின் அண்ணன் மகனான அஜித் பவாரின் செயல், குடும்பத்திற்குள்ளும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சரத் பவாரின் மகள் சுப்ரியா தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில், அஜித் பவார் துரோகம் செய்து விட்டதாகவும், கட்சியும் குடும்பமும் பிளவுபட்டு விட்டது என்றும் கூறியுள்ளார்.