This Article is From Nov 20, 2019

தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தும் டீசன்ட் நடிகர் அஜித்: ஜெயக்குமார் பாராட்டு!

ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தும் டீசன்ட் நடிகர் அஜித்: ஜெயக்குமார் பாராட்டு!

தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தும் டீசன்ட் நடிகர் அஜித்குமார்.

தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தும் டீசன்ட் நடிகர் அஜித்குமார் என அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டியுள்ளார். 

முன்னதாக, நேற்றைய தினம் ஒடிசா பல்கலைக்கழகத்தில், டாக்டர் பட்டம் பெற்று திரும்பிய நடிகர் கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நானும், ரஜினியும் இணைவதில், அதிசயம் எதுவும் இல்லை. 44 ஆண்டுகளாக இணைந்து தான் உள்ளோம். 

அரசியலில் இணையும் அவசியம் வந்தால், கண்டிப்பாக சொல்கிறோம். தற்போது வேலை தான் முக்கியம். இதை பேச வேண்டியதில்லை. தமிழகத்தின் மேம்பாட்டிற்காக, இருவரும் சேர்ந்து பயணிக்க வேண்டியது வந்தால் பயணிப்போம் என்று அவர் கூறினார். 

இதையடுத்த ஒரு 1 மணி நேரத்தில் கோவா செல்வதற்காக, சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திடம், கமல்ஹாசன் கருத்து குறித்து கேள்வி எழுப்பிய போது, "மக்கள் நலனுக்காக, நானும், கமலும் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், நிச்சயமாக இணைவோம்,'' என்றார்.

இதேபோல், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில், கமல்-60 என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி, 2 ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். 

தமிழக அரசு நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று 99 சதவீதம் பேர் சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்து தடைகளை தாண்டி ஆட்சி நீடித்து வருகிறது. அதுமாதிரியான அதிசயம், நேற்று நடந்தது; இன்று நடக்கிறது; நாளையும் நடக்கும் என்றார். 

நடிகர் ரஜினிகாந்தின் இந்த பேச்சு அதிமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அதிமுக அமைச்சர்கள் பலர் ரஜினிகாந்தின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.  

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  ரஜினி, கமல், விஜய் எல்லாம் மாய பிம்பங்கள், கானல் நீர் போன்று காணாமல் போய்விடுவார்கள். 

இவர்கள் தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள். அதிமுக கூட்டணி முன்பு ரஜினி, கமல் இணைப்பெல்லாம் தூள்தூளாகும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என கூறினார். 

மேலும் பேசிய அவர்; தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தும் டீசன்ட் நடிகர் அஜித்குமார். நடிகர் அஜித்குமார் திரையுலக பக்தியும், நல்ல பண்பும் கொண்டவர் எனவும் பாராட்டினார்.

.