மொத்தம் 403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப்பிரதேச சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் 2022-ல் நடைபெறவுள்ளது.
Lucknow: உத்தரபிரதேச மாநில தேர்தலில் எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
மாநிலத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பொறுப்பில் இருந்து வருகிறது. அடுத்ததாக 2022-ல் உத்தரப்பிரதேசம் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. இதற்காக அம்மாநிலத்தை ஆண்ட சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் தயாராகி வருகின்றன.
கடந்த மக்களவை தேர்தலின்போது எதிரிக் கட்சிகளாக இருந்த சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் கூட்டணி அமைத்திருந்தன. இதற்கு எந்தவொரு பலனும் கிடைக்காததால், அடுத்து வந்த இடைத்தேர்தல்களில் இந்த கூட்டணி பிரிந்தது.
இந்த நிலையில் மொத்தம் 403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப்பிரதேச சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் 2022-ல் நடைபெறவுள்ளது. இதில் தனித்துப் போட்டியிடுவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
நாட்டில் அதிக மக்களவை தொகுதிகளைக் கொண்டதாக உத்தரப்பிரதேசம் உள்ளது. இங்குள்ள 80 மக்களவை தொகுதிகளில் அதிக இடங்களை கைப்பற்றும் கட்சி, தேசிய அரசியலில் முக்கிய பங்கை வகிக்கும். அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் வாக்கு வங்கியை அதிகரிக்கும் முயற்சியில் பல்வேறு கட்சிகள் இறங்கியுள்ளன.
காங்கிரஸ் தரப்பில் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி முன்னிலைப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக அவரை உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு மண்டல பொதுச் செயலாளராக காங்கிரஸ் நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.