This Article is From Sep 05, 2018

ஸ்டாலினுடன் இணக்கமாக நினைக்கிறாரா அழகிரி?

சென்னை வாலாஜா சாலை தொடங்கி கருணாநிதி சமாதி வரை ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினார் மு.க.அழகிரி

ஸ்டாலினுடன் இணக்கமாக நினைக்கிறாரா அழகிரி?

தனது பலத்தை காட்ட, ஆதரவாளர்களுடன் சென்னை வாலாஜா சாலை தொடங்கி கருணாநிதி சமாதி வரை ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினார் மு.க.அழகிரி. இதில் கவனிக்க வேண்டிய ஒன்று, எப்போதும் ஸ்டாலினை விமர்சிக்கவும், தாக்கி பேசவும் செய்யும் அழகிரி இன்று அவ்வாறு எதுவும் பேசவில்லை. தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டி அழகிரி சொல்லாமல் சொல்வது போல இருப்பதாக அரசிய விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

தனக்கு இருக்கும் ஆதரவு பலத்தை காட்டுவதற்காக கூட்டப்பட்டது இந்த பேரணி. ஆனால், எதிர்பார்த்தது போல எந்த பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை இந்த பேரணி. கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் செலுத்தும் வகையில் கருப்பு சட்டை அணிந்திருந்தார் அழகிரி. அவருடன், மகன் தயாநிதி அழகிரி, மகள் கயல்விழி, முன்னாள் மதுரை மேயர் மன்னன் மற்றும் சில முன்னணி ஆதரவாளர்கள் அவர் உடன் பேரணியில் பங்கேற்றனர்.

இந்த பேரணியில் தி.மு.கவைச் சேர்ந்த ஒருவர் கூட பங்கேற்கவில்லை. முன்னதாக,கட்சிப் பொறுப்பில் தி.மு.க பிரமுகர் ஒருவர் அழகிரியுடன் கைகுழுக்கியதால், பொறுப்பில் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. “ 1.5 லட்சம் பேர் இந்த பேரணியில் பங்கேற்றனர். இவர்கள் அனைவர் மீதும், தி.மு.க நடவடிக்கை எடுக்குமா என்று கேளுங்கள்” என்று நிரூபர்களிடம் காட்டமாக பேசினார் அழகிரி.

“ கலைஞருக்கு மரியாதை செலுத்துவதை தவிர இந்த பேரணிக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை” என்றார் அழகிரி.

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது குடும்பம் ஒன்று திரண்டிருந்தது. ஆனால், அவர் மறைந்த சில நாட்கள் கழித்து, கலைஞர் சமாதியில் அஞ்சலி செலுத்திய அழகிரி, திமுகவின் உண்மைத் தொண்டர்கள் தன்னுடன் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தன்னை கட்சியில் சேர்க்காவிட்டால், திமுக தனக்கு தானே குழி தோண்டிக் கொள்ளும் என்றார்.

ஆனால், ஆகஸ்ட் 28-ம் தேதி ஸ்டாலின் தலைவராக பதவி ஏற்றதும், அழகிரி தனது முடிவில் மாற்றம் செய்து கொண்டதாக தெரிகிறது. ஸ்டாலின் பதவி ஏற்புக்கு இரண்டு நாட்களுக்கு முன், கட்சியில் சேர்க்கப்பட்டால் தான் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்தார்.

அதே நேரம் “1500 பேர் கொண்ட பொதுக்குழு தான் கட்சியா?” என்று ஸ்டாலின் தலைவராக தேர்வானது குறித்தும் பேசினார்.

2014-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும், அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார், அழகிரி. ஆனால், கலைஞர் மறைவுக்கு பிறகு அவர் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க முயற்சிப்பார் என அரசியல் பார்வையாளர்கள் கணித்திருந்தனர். தென் தமிழக திமுகவின் அமைப்பு செயலாளராக இருந்த அழகிரிக்கு, தொண்டர்களின் ஆதரவு இருந்தது. ஆனால், 4 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு தான் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.