நியூயார்க்: ஆன்லைன் வர்த்தக உலகில் கலக்கி வரும் அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா வர்த்தக துறையில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.. 54-வயதில் அவர் ஓய்வை அறிவித்திருப்பது வர்த்தக உலகில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த ஜாக் மா “அலிபாபா” நிறுவனத்தை கடந்த 1999-ல் நிறுவினார். தொழில் முறையில் ஆங்கில ஆசிரியரான அவர் இன்றைக்கு சீனாவின் நம்பர் ஒன் பணக்காரராக உள்ளார். ‘நான் ஒரு தொழில்நுட்ப வல்லுனர் கிடையாது’ என்று ஜாக் மா அடிக்கடி நகைச்சுவையாக குறிப்பிடுவார். ஆனால், அவருடைய வழிகாட்டுதலின்படி செயல்பட்ட அலிபாபா நிறுவனம் இன்றைக்கு சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக உள்ளது.
அமேசானைப் போன்று அலிபாபாவும் ஆன்லைன் வர்த்தகம், ஆன்லைன் பணம் செலுத்துதல், நெட் பேங்க், என்டர்டெய்ன்மென்ட் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறது. சீனாவின் சமூக வலைதளமான வெய்போவிலும் அலிபாபாவுக்கு பங்கு உள்ளது. (அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான வாஷிங்டன் போஸ்டின் உரிமையாளர் அமேசான் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பெசாஸ் என்பது கவனிக்கத்தக்கது).
கடந்த ஆண்டில் மட்டும் அலிபாபா நிறுவனம் 40 பில்லியன் டாலர் (ரூ. 2.9 லட்சம் கோடி) அளவுக்கு வருமானம் ஈட்டியுள்ளது. கடந்த 4 மாதங்களில் அந்த நிறுவனம் சுமார் 72 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலிபாபா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக 2013 வரை ஜாக் மா செயல்பட்டார். பின்னர் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார். 2014-ல் தொடங்கப்பட்ட அவரது ஜாக் மா அறக்கட்டளை நிறுவனம் கல்வி சேவையில் ஈடுபட்டு வருகிறது.
ஜாக் மாவின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து அலிபாபாவின் பங்குகள் 2 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன.. டைம்ஸ் இதழுக்கு பேட்டியளித்த ஜாக் மா, திங்களன்று தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். அன்றைய தினம் சீனாவில் “ஆசிரியர் தினமாக” கடைபிடிக்கப்படுகிறது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)