This Article is From Mar 31, 2019

வாக்குப்பதிவு தினத்தில் அனைத்து நிறுவனங்களும் விடுமுறை அளிக்கவேண்டும்! - தேர்தல் ஆணையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது

வாக்குப்பதிவு தினத்தில் அனைத்து நிறுவனங்களும் விடுமுறை அளிக்கவேண்டும்! - தேர்தல் ஆணையம்

வாக்குப்பதிவு தினத்தில் அனைத்து நிறுவனங்களும் விடுமுறை அளிக்கவேண்டும் என்றும் அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனம் மீது தொழிலாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் தேதி நெருங்கி வருவதால், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் 67,664 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1400 பேர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் அதிக செலவு செய்வது தொடர்பாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த கோரி திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகளில் அரசு அலுவலர்கள் பாரபட்சமின்றி நடந்து கொள்ளாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குப்பதிவு நாள் அன்று அனைத்து நிறுவனங்களும் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும், அவ்வாறு விடுமுறை அளிக்காவிடில் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மீது தொழிலாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

வாக்களிப்பதற்காக மாலை 6 மணிக்கு மேல் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். வி.வி.பேட் கருவியை பயன்படுத்துவதால் வாக்குப்பதிவில் காலதாமதம் ஏற்படாது. அனைத்து சோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட பிறகே வி.வி.பேட் கருவி பயன்படுத்தப்பட உள்ளது.

துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்திய விவரங்களை வருமானவரித்துறை தரவில்லை. வருமானவரித்துறை விவரம் அளித்த பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.


 

.