வெளிநாட்டுப் பயணிகள், வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால்தான் இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு ஏப்ரல் 14-ம்தேதி வரை தடை நீட்டிப்பு
- ஜனவரி 18 முதல் 15 லட்சம் பயணிகளிடம் விமான நிலையத்தில் சோதனை
- மாநில அரசு கண்காணிக்கும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை குறைவால் அதிர்ச்சி
New Delhi: கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், உள்நாட்டு விமானப் போக்குவரத்திற்கும் ஏப்ரல் 14-ம்தேதி வரை தடை நீட்டிக்கப்படுவதாக விமானப்போக்குவரத்து துறை இன்று அறிவித்துள்ளது.
சர்வதேச விமானங்களுக்கான தடை மார்ச் 31-ம்தேதி வரை விதிக்கப்பட்டு, அது பின்னர் ஏப்ரல் 14-ம்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் உள்நாட்டு போக்குவரத்துக்கும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு வெளிநாட்டுப் பயணிகளும், வெளிநாட்டிலிருந்து வந்த இந்தியர்களும்தான் முக்கிய காரணங்களாக உள்ளனர்.
கொரோனாவின் தன்மையும், இந்தியாவில் அது பரவுவதற்கு காரணமாக அமைந்து விட்டது. ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் அது வெளிப்படுவதற்கு அதிகபட்சம் 14 - 21 நாட்கள் வரை ஆகலாம்.
இதனால், வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தபோதிலும், விமான நிலையத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் நேர்ந்தது.
தற்போது வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள், அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அந்தந்த மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது. குறிப்பாக ஒருவர் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்திருப்பார் என்றால், அவரது வீட்டில் ஸ்டிக்கரை அதிகாரிகள் ஒட்டி விடுகின்றனர். அதில் சம்பந்தப்பட்டவரின் பெயர், குடும்பத்தினர் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டிய காலம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
இந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கண்காணிக்கப்படுகின்றனர்.
ஜனவரி 18 முதல் மார்ச் 23-ம்தேதி வரையில் 15 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளனர். அதே நேரத்தில் ஒவ்வொரு மாநிலங்களும் கண்காணிக்கும் நபர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கைக்கும், இந்தியாவில் கண்காணிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் அதிகம் இருப்பதாக மத்திய அரசு இன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் சிலர் வெளியே சுதந்திரமாக சுற்றியிருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிக்கலை ஏற்படுத்தும் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.