கேரள மாநிலம் முழுவதும் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் இருபது பேர் இறந்துள்ளனர். இடுக்கியில் பதினொரு பேரும், மலப்புரத்தில் அறுவரும், கோழிக்கோட்டில் இருவரும், வயநாட்டில் ஒருவரும் இதுவரை மழைக்குப் பலியாகி உள்ளனர். பாலக்காடு, வயநாடு, கோழிக்கோடு பகுதிகளில் பலரைக் காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக மத்திய படைகளின் உதவியை மாநில அரசு கோரியுள்ளது. இந்நிலையில் கொத்தமங்கலம், குன்னதுநாடு, அலுவா, பாராவூர் தாலுகா மற்றும் கடமக்குடி ஆகிய இடங்களில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, இடுக்கி அணையில் இருந்து இன்று நீர் திறந்துவிடப்பட்டிருப்பதால் கொச்சி விமான நிலைய ஓடுபாதையில் நீர் தேங்கும் என்ற அச்சம் ஏற்பட்டது. இதன் காரணமாக அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களின் தரையிறக்கம் இரண்டு மணி நேரத்துக்கு தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டது. பிற்பகல் இரண்டரை மணி வரை பல விமானங்களும் அருகில் உள்ள வேறு நகரங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன. பிரச்சினை இல்லை என்றபோதிலும் 2013ஆம் ஆண்டு ஓடுபாதையில் வெள்ளம் ஏற்பட்டதைக் மனதில்கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது.
கேரளத்தில், வரலாறு காணாத வகையில் நீர்மட்டம் உயர்ந்ததால் கடந்த மூன்று வாரங்களில் 22 அணைகள் திறந்துவிடப்பட்டன. இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் 26 ஆண்டுகள் கழித்து இப்போது அதிலிருந்து வெள்ளோட்டம் பார்க்க முன்பே நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
அயன்குளு, இடுக்கி மற்றும் வயநாட்டில் ராணுவ வீரர்கள் மீட்பு நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கோழிக்கோடு மற்றும் மல்லப்புரம் பகுதிகளில் ராணுவத்தினரின் தேவை இருப்பதாக மத்திய அரசுக்கு தெரியபடுத்தப்பட்டுள்ளது.
கேரள மின்சார வாரியம், இடுக்கி அணை நிரம்பியுள்ளதால், மூன்றாவது முறையாக ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. நாளை காலை இடுக்கி அணை திறந்துவிடப்பட உள்ளது. இன்று 4 மணி அளவில், இடுக்கி அணையின் நீர், 2399.56 அடி என்ற அளவில் இருந்தது.