"பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் என்ற உறுதிமொழிக்குப் பிறகும் கூட கூட்டத்துக்கு அதிமுக அரசு, காவல் துறை மூலமாக அனுமதி மறுத்திருக்கிறது"
ஹைலைட்ஸ்
- கொரோனா பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது
- இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருந்தது
- இந்நிலையில், நாளை காணொலி மூலம் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழக எதிர்க்கட்சியான திமுக தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாலும், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும், கூட்டத்திற்கு அனுமதி கொடுக்க முடியாது என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது. இதனால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை காணொலிக் காட்சி மூலம் நடத்த உள்ளது திமுக.
இது குறித்து திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின், “ஊரடங்கு நடைமுறையில் இருக்கின்ற நேரத்தில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஏன் மதத் தலைவர்களுடனும் கூட ஆளுங்கட்சியின் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
கொரோனா குறித்து, மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க 15.04.2020 அன்று திமுக, அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தை அறிவித்திருந்தது.
பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் என்ற உறுதிமொழிக்குப் பிறகும் கூட கூட்டத்துக்கு அதிமுக அரசு, காவல் துறை மூலமாக அனுமதி மறுத்திருக்கிறது.
அதிமுக அரசினைப் போல ஜனநாயக நெறிகளுக்கு முரணாக அரசியல் செய்ய திமுக விரும்பவில்லை. ஏப்ரல் 15 அன்று அறிவிக்கப்பட்ட அதே அனைத்துக் கட்சிக் கூட்டம், ஏப்ரல் 16 ஆம் தேதியன்று காணொலிக் காட்சி மூலம் நடைபெறும்,” என்று அறிவித்துள்ளார்.