வைகோ, திருமா போன்றோரை திருப்திபடுத்தவே அனைத்துக் கட்சி கூட்டத்தை மு.க.ஸ்டாலின் நடத்தியதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக புதிய அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அணை கட்டுவதற்கான
சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்து விட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
உடனே, கர்நாடகாவின் திட்டத்தை நிராகரிக்கும்படி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.
இதையடுத்து, டெல்லி சென்ற கர்நாடக முதல்வர் குமாரசாமி, தனது மாநில எம்பி.க்களுடன் பிரதமரை செப். 10-ம் தேதி சந்தித்தார். அப்போது, மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி வழங்கக்கோரி மனு கொடுத்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு, மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு வேகமாக செய்தது.
இந்த நிலையில் மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனை எதிர்கொள்வது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தினார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
மேகதாது விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் கண்துடைப்பு நாடகம். அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு செய்ய மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வைகோ, திருமா போன்றோரை திருப்திபடுத்துவதற்காக மட்டும்தான் அனைத்துக்கட்சி கூட்டத்தை ஸ்டாலின் நடத்தியுள்ளார்.
பெண்களை மோசமாக சித்தரித்து விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு டெல்லியில் பேசியுள்ளார். குறைகளை சொல்லியே ஸ்டாலின் அரசியல் நடத்தி வருகிறார். ஊழல் செய்பவர்களை விசாரிக்க ஆணையம் வேண்டும் என்று ஸ்டாலின் சொல்கிறார். அதை ஏன் திமுக ஆட்சியிலேயே செய்யவில்லை.
இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.