This Article is From Feb 22, 2019

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!

சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடக்கிறது.

ஹைலைட்ஸ்

  • நாடாளுமன்ற தேர்தல் குறித்து இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது
  • அனைத்து கட்சி கூட்டத்தை தேர்தல் ஆணையம் நடத்துகிறது
  • ஏப்ரல் அல்லது மே-யில் மக்களவை தேர்தல் நடத்தப்படலாம்

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு இன்று அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை தேர்தல் ஆணையம் நடத்தவுள்ளது. 

அதிமுக – பாமக – பாஜக கூட்டணி நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தேமுதிகவுடன் பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும் தொகுதி பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜகவுக்கு ஒதுக்கியது போக மீதம் 28 தொகுதிகள் இருக்கின்றன. இவற்றை பங்கீடு செய்வதில் கருத்தொற்றுமை எட்டப்படவில்லை.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க இன்று சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்திருந்தார். தலைமை செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான தேதி இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

.