ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது.
Srinagar: ஜம்மு - காஷ்மீரில் வரும் திங்கள் முதல் அனைத்து போஸ்ட்-பெய்ட் மொபைல்களுக்கான சேவைகளும் தொடங்கப்படும் என அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்து கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், ஜம்மு-காஷ்மீரைப் பிரித்து லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீா் என இரண்டு யூனியன் பிரதேசங்களை உருவாக்குவதாகவும் மத்திய அரசு அறிவித்தது.
அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு கடும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டன. தொலைபேசி, இணையச் சேவைகளும் துண்டிக்கப்பட்டன.
மேலும் அரசியல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதனால், ஜம்மு-காஷ்மீரில் தொடா்ந்து 68-ஆவது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பெரும்பாலான இடங்களில் படிப்படியாக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் செய்தியாளர்களிடம் கூறியதாவது, குறிப்பிட்ட போஸ்ட்பெய்டு மொபைல் இணைப்புகள், என்று இல்லாமல், சேவை வழங்குநரைப் பொருட்படுத்தாமல் அனைத்து போஸ்ட்பெய்ட் மொபைல் போன் இணைப்புகளும் வரும் திங்கள் பிற்பகல் (அக்.14) முதல் மீண்டும் சேவை தொடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் மொபைல் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், போஸ்ட்-பெய்ட் சேவை கொண்ட மொபைல்களுக்கு திங்கள் முதல் தடை நீக்கப்படுகிறது. காஷ்மீரில் 66 லட்சம் மொபைல் பயனாளர்களில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போஸ்ட்-பெய்ட் சேவையை பயன்படுத்துகின்றனர்.
அதனால் முதல்கட்டமாக அந்த சேவைக்கு அனுமதியளிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.