Madurai: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனான மு.க.அழகிரி தனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி காலமானார். இதையடுத்து, அவர் 8 ஆம் தேதி மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். சில நாட்களுக்குப் பின்னர் கருணாநிதி அடக்கம் செய்த இடத்துக்குச் சென்ற அழகிரி, ‘என் மனதில் இருந்த ஆதங்கத்தை அப்பாவிடம் சொல்லவிட்டேன். அது குறித்து மக்களுக்கு விரைவில் தெரியவரும். திமுக-வின் உண்மை விசுவாசிகள் என் பக்கம் தான் உள்ளனர்’ என்று கருத்து கூறி பகீர் கிளப்பினார்.
இதனால் திமுக-வில் மீண்டும் ஸ்டாலின் - அழகிரி மோதல் வலுக்கத் தொடங்கியது.
இந்நிலையில் அழகிரி, ‘அடுத்த மாதம் 5 ஆம் தேதி சென்னையில் அமைதிப் பேரணி நடத்த உள்ளேன். அந்தப் பேரணிக்குப் பிறகு எனது அடுத்தக்கட்ட நகர்வு குறித்து தெரிவிப்பேன். எனது ஆதரவாளர்கள் அனைவரிடமும் கருத்து கேட்டறிந்த பின்னர் தான் அடுத்தக்கட்டம் குறித்து முடிவெடுப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு, அழகிரி, கருணாநிதியால் திமுக-விலிருந்து விலக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.