"கோவையின் பீளமேடு பகுதி மிகவும் வறண்ட இடமாகும். அங்கு கூட 73 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது"
தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சியில் கடந்த 3 நாட்களில் மட்டும் 213 சென்டீ மீட்டர் மழைக்கு மேல் பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தைத் தவிர தமிழகத்தின் கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கோவையைப் பொறுத்தவரை இதுவரை வரலாறு காணாத வகையில் ஆகஸ்ட் மாதம் அதிக மழை பெய்துள்ளது.
கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழை குறித்து பிரபல வானிலை கணிப்பாளர், பிரதீப் ஜான், “ஆகஸ்ட் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கோயம்புத்தூரில் மழை பெய்துள்ளது. பொள்ளாச்சியில் மட்டும் 160 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது. அதைத் தவிர கோவை மாவட்டத்தின் சின்னக்கள்ளர் பகுதியில் 372 மில்லி மீட்டர் மழையும், வால்பாறை வட்டத்துக்கு உட்பட்ட பெரியகள்ளர்பகுதியில் 355 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது” என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் இது குறித்து தெரிவிக்கையில், “கோவை நகரம் உள்ளிட்ட பகுதிகளில் கூட கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவையின் பீளமேடு பகுதி மிகவும் வறண்ட இடமாகும். அங்கு கூட 73 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இப்படி கோவையின் வறண்ட பகுதிகள் கூட மழை பொழிவைப் பெறுகிறது என்றால் மழையின் வீரியத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்” என்றுள்ளார்.
தொடர்ந்து அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.