This Article is From Jun 16, 2018

ரமலான் பண்டிகை கொண்டாடுவதற்கான காரணம் தெரியுமா?

இம்மண்ணில் முசல்மானாக பிறந்த ஒவ்வொருவருக்குமே ஐம்பெரும் கடமைகள் உண்டு என இஸ்லாம் சொல்கிறது

Advertisement
இந்தியா Posted by

Highlights

  • நாவில் நீர் சொட்டவைக்கும் உணவுகள் இந்திய விருந்துகளில் நிரம்பி கிடக்கும்
  • குரானின் கூற்றுப்படி, ரய்யான் என அழைக்கப்படும் சொர்க்க வாசல் ஒன்று உண்டு
  • மிக தூய்மையாக இருக்க வேண்டி, ஒரு பயிற்சியாகவே நோன்பு வைக்கின்றனர்
‘ஈதுல் பித்ர்’ என அழைக்கப்படும் ரம்ஜான் பண்டிகை இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உதவும் பண்பையும், பாரபட்சமற்ற அன்பையும், சகோதரத்துவத்தையும் அனைவரது மனத்திலும் விதைத்திடும் நோக்கிலேயே உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது.

நோன்பு நோற்கும் காரணம்:

இம்மண்ணில் முசல்மானாக பிறந்த ஒவ்வொருவருக்குமே ஐம்பெரும் கடமைகள் உண்டு என இஸ்லாம் சொல்கிறது. அந்த ஐந்து அடிப்படை கடமைகளில் மூன்றாவது கடமை, இந்த ரமலான் மாத நோன்பு ஆகும். இஸ்லாமிய ஆண்டுக்குறிப்பேட்டின் படி, ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பது வழக்கம். ரமலான் நோன்பு நோற்பவர்கள் சூரியன் உதிப்பதற்கு முன் தொடங்கி சூரியன் மறையும் வரை, உண்ணாமல், நீரருந்தாமல், எச்சிலை கூட விழுங்காமல், எந்த தீய பழக்கங்களிலும் ஈடுபடாமல் இருப்பது கட்டாயம் ஆகிறது. ஒரு மனிதனின் உடல் மட்டுமின்றி உள்ளத்தளவிலும் மிக தூய்மையாக இருக்க வேண்டி, ஒரு பயிற்சியாகவே இஸ்லாமியர்கள் நோன்பு வைக்கின்றனர்.

Advertisement
குரான் என்ன சொல்கிறது:

குரானின் கூற்றுப்படி, ரய்யான் என அழைக்கப்படும் சொர்க்க வாசல் ஒன்று உண்டு. இந்த புனித ரமலான் மாதத்தில் நற்குணத்தோடு நோன்பு இருந்தவர்கள் மட்டுமே, இந்த வாசல் வழியாக அழைக்கப்படுவார்கள் என்கிறது இஸ்லாம் மதம்.

Advertisement
சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம் என்றும், துஆக்கள் (பிரார்த்தனைகள்) எல்லாம் அங்கீகரிக்கப்படும் மாதம் என்றும், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் தந்திடும் மாதம் என்றும், மிக அதிகமான அளவில் நன்மைகளை செய்யவேண்டிய மாதம் என்றும் ரமலான் மாதத்திற்கு பல சிறப்புக்கள் இருப்பதாக இஸ்லாமிய மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த புனித மாதத்தில் கூட எந்த நன்மைகளையும் செய்யாதவர்கள் அவர்களது எல்லா நன்மைகளையும் இழந்தவர் என்றும், இந்த மாதத்தில் அல்லாவிடம் பாவமன்னிப்புக் கேட்காதவர் அல்லாவின் கருணையையும் அருளையும் விட்டு வெகுதூரத்தில் இருப்பார்கள் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்.

யாரெல்லாம் நோன்பு நோற்பது கட்டாயமல்ல:

Advertisement
எந்த ஒரு இஸ்லாமியனும், 7 வயதில் இருந்தே நோன்பு நோற்கலாம். எனினும் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாதவிடாயில் இருக்கும் பெண்கள், தீராத நோயால் அவதிப்படுபவர்கள், மனநலம் குன்றியவர்கள், நீண்ட பயணம் மேற்கொள்பவர்கள் உள்ளிட்டவர்கள் நோன்பு நோற்காமல் இருந்திட இஸ்லாம் அனுமதிக்கிறது.

ரம்ஜான் கொண்டாட்டங்கள்:

Advertisement
30 நாட்கள் நோன்பு முடிந்து, 'ஈகைத் திருநாள்' பண்டிகை இஸ்லாமியர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். புதுத்துணி உடுத்துவது, வகை வகையான உணவுகள் சமைப்பது, ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வது, நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திப்பது, மற்ற மதத்தை சேர்ந்த நண்பர்களை வீட்டுக்கு அழைத்து ரம்ஜான் விருந்து உபசரிப்பது என இஸ்லாமியர்கள் மிக உற்சாகமாக கொண்டாடடும் பண்டிகை 'ரம்ஜான்'. வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், கடைசி நோன்பின் இரவு ‘Chaand Raat - நிலவின் இரவு’ எனும் பெயரில் மிகப்பெரிய பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் பண்டிகை அன்று, நாடு முழுக்க இருக்கும் இஸ்லாமியர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பணமாகவோ, இனிப்புகளாகவோ, பரிசுப் பொருட்களாகவோ கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவது வழக்கம். பிரியாணி, சேமியா, பாயாசம், கபாப், ஹலீம் என நாவில் நீர் சொட்டவைக்கும் உணவு வகைகள் இந்திய விருந்துகளில் நிரம்பி கிடக்கும்.

ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்!
 
Advertisement