This Article is From Oct 15, 2018

அலகாபாத் நகரம் “பிரயாக்ராஜ்” என பெயர் மாற்றம் செய்யப்படும் - உ.பி. முதல்வர் அறிவிப்பு

உத்தரப்பிரதேசத்தில் கும்ப மேளா நிகழ்ச்சிக்கு முன்பாகவே அலகாபாத் என்ற பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றுவதற்கு உ.பி. முதல்வர் முடிவு செய்திருக்கிறார்.

அலகாபாத் நகரம் “பிரயாக்ராஜ்” என பெயர் மாற்றம் செய்யப்படும் - உ.பி. முதல்வர் அறிவிப்பு

உ.பி. மக்கள் இந்த பெயர் மாற்றத்தை விரும்புவதாக அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.

Lucknow:

உத்தரப்பிரதேசத்தில் கருத்தொற்றுமை ஏற்படும்போது, அலகாபாத் நகரின் பெயர் “பிரயாக்ராஜ்” என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இதுகுறித்து ஆதித்யநாத் அளித்துள்ள பேட்டியில், “அலகாபாத்தை பிரயாக்ராஜ் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது உத்தரப்பிரதேச மக்களின் விருப்பம் ஆகும். இது ஒரு நல்லசெய்தி. எல்லோரும் ஏற்றுக்கொண்டால் நிச்சயம் பெயர் மாற்றம் செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அலகாபாத் நகரம் விடுதலைப் போராட்டம், கங்கை, யமுனை உள்ளிட்ட புனித நதிகளுடன் நெருங்கிய தொடர்புடையது.
அலகாபாத்தின் பெயரை கும்பமேளாவுக்குள் மாற்றம் செய்வதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது முடிவு வரவேற்பையும், எதிர்ப்பையும் பெற்று வருகிறது.


காங்கிரஸ் இந்த முடிவை எதிர்த்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் ஓங்கார் சிங் இதுபற்றி கூறுகையில், “பிரயாக் ராஜ் என்று பெயர் சூட்ட விரும்பினால் அதற்காக தனி நகரத்தை மாநில அரசு அமைத்து அதற்கு அந்த பெயரை சூட்டிக் கொள்ளலாம். அதை விட்டு விட்டு ஏற்கனவே இருக்கும் நகரின் பெயரை மாற்றம் செய்யக் கூடாது” என்று கூறியுள்ளார்.

அலகாபாத்தின் உண்மையான பெயர் பிரயாக் என்பதாகும். உத்தரப்பிரதேசத்தின் மிக பழமையான நகரங்களின் ஒன்றான இதன் பெயர், கடந்த 1575-ல் அக்பர் ஆட்சிக்காலத்தின்போது மாற்றம் செய்யப்பட்டது. அக்பர் பிரயாக் நகரை “இறைவன் வாழும் இடம்” என பொருள்படும் “இலாஹாபாத்” என்று பெயர் மாற்றம் செய்தார்.
சமீபத்தில் முகல்சாராய் ரயில் நிலையத்தின் பெயரை, தீன தயாள் உபாத்யாய் ரயில் நிலையம் என உத்தரப்பிரதேச அரசு மாற்றியது குறிப்பிடத்தக்கது.

.