This Article is From Apr 14, 2020

தமிழகத்தில் நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்க அனுமதி!

தற்போது விசைப்படகுகள் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட மாட்டாது, நாட்டுப்படகுகள், இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகள் அனுமதிக்கப்படும்.

தமிழகத்தில் நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்க அனுமதி!

கொரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழக அரசு ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி,  இந்தியா முழுவதும் அமல்படுத்தியிருந்த முழு முடக்க (LOCKDOWN) நடவடிக்கையை  மே 3 வரை நீட்டித்திருக்கிறார்.

இந்த நடவடிக்கைகள் காரணமாகத் தமிழகத்தில் மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் ஏராளமான மீன் பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. எனவே மீனவர்கள் தொடர்ந்தது தங்களுக்கு இந்த தடை உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தனர். இதனை கவனத்தில் கொண்டு தமிழக அரசு நாட்டுப் படகுகள் மூலமாக மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

கடலில் பிடிக்கப்பட்ட மீன்களை இறக்குதல், மற்றும் சந்தைக்குக் கொண்டு செல்லுதல் போன்ற பணிகளுக்குக் குறைந்த அளவில் ஆட்களைப் பயன்படுத்துமாறும், மீன்பிடி துறைமுகம், மீன் இறக்குதளங்கள், மற்றும் கடற்கரை பகுதிகளில் பிடிக்கப்பட்ட மீன்களை பொது ஏலம் மூலமாக விற்கக்கூடாது என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.

தற்போது விசைப்படகுகள் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட மாட்டாது, நாட்டுப்படகுகள், இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகள் அனுமதிக்கப்படும்.

மீன் பிடிப்பவர்கள் எந்த நாளில் எத்தனை படகுகளில் கடலுக்குச் செல்ல வேண்டும் என்பதை  அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு முடிவு செய்யும். படகு உரிமையாளர் கொரோனாவை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக, மீனவர்களுக்கு முககவசங்கம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்.  எனத் தமிழக அரசு மீன் பிடிப்பவர்களுக்கான கட்டுப்பாடுகளாக மேற்குறிப்பிட்டவற்றைத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக இருந்த நிலையில் தற்போது 12 ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. தேசிய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.