ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் 25 பேர் நாளை ஜம்மு காஷ்மீருக்கு செல்ல உள்ளனர். இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.
New Delhi: ஜம்மு காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய தலைவர்களை அங்கு அனுமதிப்பதற்கு மறுப்பு தெரிவித்து ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளை மத்திய அரசு அனுமதித்திருப்பது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதியுடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மோசமான விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்கள் அங்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் 25 பேர் நாளை ஜம்மு காஷ்மீருக்கு செல்ல உள்ளனர். இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
இந்திய தலைவர்கள் இங்குள்ள ஜம்மு காஷ்மீருக்கு செல்வதற்கு மத்திய பாஜக அரசு அனுமதி மறுத்திருக்கிறது. ஆனால் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் அங்கு செல்ல உள்ளனர். இது இந்திய நாடாளுமன்றத்தையும், ஜனநாயகத்தையும் அவமதிக்கும் செயல்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் செர்கில், 'ஜம்மு காஷ்மீருக்கு செல்ல வேண்டும் என்றால் இந்தியர்கள் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும். ஆனால் ஜம்மு காஷ்மீருக்கு வருமாறு ஐரோப்பிய பிரதிநிதிகளுக்கு மோடி அழைப்பு விடுக்கிறார். எதற்கு இந்த பாரபட்சம்' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளை இன்று சந்தித்த பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்று, தீவிரவாதத்திற்கு நிதி அளிப்போருக்கு எதிராக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.