This Article is From Oct 26, 2018

மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சிபிஐ இயக்குநர்… உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை..!

அந்த மனு இன்று 11:30 மணி அளவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், அலோக் வெர்மா சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடுவார்

ஹைலைட்ஸ்

  • அஸ்தானாவுக்கு எதிரான இன்னொரு மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது
  • சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்
  • இன்று சிபிஐ தலைமையகத்துக்கு வெளியே காங்கிரஸ் போராட்டம் நடத்தும்
New Delhi:

கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா, மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று 11:30 மணி அளவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அலோக் வெர்மா, அரசு தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அரசுக்கு சாதகமாக சில வழக்கு விசாரணையில் முடிவெடுக்கப்படவில்லை என்ற காரணத்தால் சிபிஐ-க்கு சிக்கல் எழுந்துள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல சிபிஐ அதிகாரிகளுக்கு எதிராக இருக்கும் லஞ்ச புகார்களை விசாரிக்கக் கோரி காமன் காஸ் என்ற அமைப்பு மனு தாக்கல் செய்திருந்தது. அதுவும் இன்று விசாரணைக்கு வரும்.

இது குறித்து முக்கியமான 10 தகவல்கள்:

1.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, அலோக் வெர்மாவின் மனுவை விசாரிக்கும். உச்ச நீதிமன்ற அமர்வில் நீதிபதிகள் கே.எல்.கவுல் மற்றும் கே.எம்.ஜோசப் ஆகியோரும் இருக்கின்றனர். 

2.மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், அலோக் வெர்மா சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடுவார். அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், மத்திய அரசு சார்பில் ஆஜராவார். சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, விஜிலன்ஸ் ஆணையத்துக்காக வாதாடுவார். அதேபோல, அஸ்தானாவுக்காக வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராவார். 

3.வெர்மா, 1998 உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார். அப்போதைய தீர்ப்பில், சிபிஐ இயக்குநருக்கு கட்டாய 2 ஆண்டுகள் பணி நியமனம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

4.அதே நேரத்தில் மத்திய அரசு, சமீபத்திய நடவடிக்கைகளால் சிபிஐ அமைப்பின் மாண்பு களங்கப்பட்டுவிட்டது என்றும், விஜிலன்ஸ் கமிஷனரின் வழிகாட்டுதலின் பேரிலேயே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது என்றும் வாதாடும் என்று தெரிகிறது.

5.கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள வெர்மா மற்றும் அஸ்தானா, ஆகிய இருவருக்கும் அவர்களின் பதவி மீண்டும் வழங்கப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாகேஷ்வர் ராவ், இடைக்கால சிபிஐ இயக்குநராக மட்டுமே செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தரப்பு, ‘சிபிஐ இயக்குநரை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் எதிர்கட்சித் தலைவரின் அனுமதி இல்லாமல் நீக்க முடியாது. இது குறித்து சட்ட சாசனம் தெளிவாக வரையறுத்த போதிலும், அதற்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது' என்று குற்றம் சாட்டியுள்ளது.

7.சிபிஐ அமைப்புக்கு எதிராக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையைக் கண்டித்து, டெல்லியில் இருக்கும் சிபிஐ அலுவலகத்து முன்னர் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

8.'குற்றச்சாட்டில் சிக்கியுள்ள 2 மூத்த சிபிஐ அதிகாரிகளும், அமைப்பிலிருந்து விலகி இருப்பது கட்டாயம். அப்போது தான் இந்த விஷயம் குறித்து உண்மை தன்மையை அறிய முடியும்' என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். 

9.நேற்று அலோக் வெர்மாவின் டெல்லி வீட்டுக்கு அருகில் சிலர் நோட்டமிட்டனர். இதைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் நோட்டமிட்ட நபர்களை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இந்த சம்பவமும் பலத்த கண்டனங்களுக்கு உள்ளானது.

10.சில நாட்களுக்கு முன்னர் அலோக் வெர்மா, அஸ்தானா மீது 3 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டி எப்.ஐ.ஆர் பதிவு செய்தார். ஆனால் வெர்மாவின் நடவடிக்கைக்கு சில மாதங்களுக்கு முன்னர் அஸ்தானா, அவர் தான் 2 கோடி ரூபாய் லஞ்சப் பணம் பெற்றுள்ளார் என்று அரசுக்கு எழுத்துபூர்வமாக புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் தான் சிபிஐ-க்குள் பனிப் போர் மூண்டது. 

.