ஜம்மு காஷ்மீரில் தற்போது வரையில் 9 ஆயிரம்பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 143 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
New Delhi: கொரோனா பாதிப்பு காரணமாக அமர்நாத் புனித யாத்திரைக்கு நாள் ஒன்றுக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 21-ம்தேதி முதல் அமர்நாத் யாத்திரை தொடங்கப்படவுள்ளது. இதையொட்டி, நாடாளுமன்றத்தின் வடக்கு கட்டிட பகுதியில் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதன் முடிவில் அமர்நாத் யாத்திரைக்கு நாள் ஒன்றுக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களும் சமூக விலகல் போன்ற கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்கள். 16 கிலோமீட்டர் தொலைவு கொண்ட பல்தால் வழிப்பாதை மட்டுமே அமர்நாத் யாத்திரைக்காக திறந்து விடப்படும்.
பாகல்கம் பாதை பனியால் மூடப்பட்டுள்ளது. அந்த பாதை திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
42 நாட்களுக்கு அமர்நாத் புனித யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும். நடப்பாண்டில் கொரோனா பாதிப்பு காரணமாக ஜூன் 23-ம்தேதி தொடங்க வேண்டிய யாத்திரை கால தாமதமாக தொடங்கவுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய 2018ம் ஆண்டில் அமர்நாத் யாத்திரை 60 நாட்களுக்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே வைஷ்னோ தேவி கோயிலுக்கு செல்ல ஜூலை 31ம் தேதி வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாக இந்த தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தற்போது வரையில் 9 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 143 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.