ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இந்த மாதத் தொடக்கத்தில் ரத்து செய்தது மத்திய அரசு
ஹைலைட்ஸ்
- காஷ்மீர் விவகாரத்தில் தவறிழைத்துள்ளது அரசு: சென்
- இந்தியா, தனது ஜனநாயக மாண்பை இழந்துள்ளது- சென்
- 'ஜனநாயகம் இல்லாமல் காஷ்மீரில் தீர்வு இருக்காது'
New Delhi: நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநரான அமர்த்தியா சென், மத்திய அரசு, காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது குறித்து பகிரங்கமாக விமர்சனம் செய்துள்ளார். “பெரும்பான்மையினர் ஆட்சி செய்தால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணமாக காஷ்மீர் விவகாரம் மாறியுள்ளது. ஜனநாயகம் இல்லாமல் காஷ்மீர் விவகாரத்தில் சுமூக தீர்வு இருக்க வாய்ப்பில்லை” என்று NDTV-க்கு சென் அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகளில் பல்வேறு ஓட்டைகள் இருப்பதாக சொல்லும் அமர்த்தியா சென், “ஒரு இந்தியனாக இந்த முடிவு எனக்குப் பெருமை அளிக்கவில்லை. உலக அளவில், தான் ஒரு ஜனநாயகப்பூர்வ நாடு என்று காட்டுவதில் இந்தியா முனைப்போடு செயல்பட்டது. மேற்கத்திய நாடுகளைத் தவிர்த்து ஜனநாயகப் பாதையை தேர்வு செய்த முதல் நாடு இந்தியாதான். ஆனால் இப்போது அந்த மாண்பை இழந்துள்ளோம்” என்று விளக்குகிறார்.
ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இந்த மாதத் தொடக்கத்தில் ரத்து செய்தது மத்திய அரசு. மேலும் ஜம்மூ காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து உத்தரவிட்டது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர், இந்த முடிவை வரவேற்றனர். இந்த நடவடிக்கையின் மூலம் ஜம்மூ காஷ்மீருக்கென்று இருந்த தனி சட்ட சாசனம், தனி மாநிலக் கொடி, தனி உரிமைகள் நீக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் அமலில் இருக்கும் சட்ட சாசனமே, இனி ஜம்மூ காஷ்மீரிலும் செல்லும்.
இது குறித்து மேலும் பேசிய சென், “இந்த விவகாரத்தைப் பற்றி காஷ்மீர் மக்கள்தான் முடிவெடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் அது அவர்களுக்குச் சொந்தமான நிலப் பகுதி. காஷ்மீரில் இருக்கும் மக்கள் பிரநிதிகளையும் அரசியல் கட்சித் தலைவர்களையும் சிறை வைத்துவிட்டு உண்மையான நீதியை உங்களால் நிலைநாட்ட முடியாது. அம்மாநிலத்தை ஆண்ட முன்னாள் முதல்வர்களைக் கூட நீங்கள் சிறை வைத்துள்ளீர்கள். ஜனநாயகத்தை வெற்றிகரமாக வைத்திருக்கும் காரணிகளை நீங்கள் நசுக்குகிறீர்கள்.” என்றார்.
காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு தரப்பு, ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை' என்று தெரிவித்தது.
அதற்கு சென், “இது காலனியாதிக்கவாதிகளின் பதில். இந்த காரணத்தைச் சொல்லித்தான் பிரிட்டிஷ், நம் நாட்டை 200 ஆண்டுகள் ஆண்டது. நமக்கு சுதந்திரம் கிடைத்த பின்னரும் இப்படி காலனியாதிக்க நடவடிக்கையில் இறங்குகிறோம் என்பது சரியில்லை” என்று முடித்தார்.