#AmazonWeAreNotRobots என்ற ஹேஷ்டேக் மூலம் அமேசானுக்கு எதிரான போராட்டத்தை சமூக வலைதளங்களிலும் செய்து வருகின்றனர்.
உலகமே அமேசானில் உள்ள ஆஃபர் மூலம் பொருள் வாங்கிக்கொண்டிருக்கும் வேளையில், அமேசான் புதிய பிரச்னையை சந்தித்துள்ளது. ஐரோப்பாவில் உள்ள அமேசான் கிடங்கில் உள்ள தொழிலாளர்கள் பணியிடத்தில் இருக்கும் பாதுகாப்பற்ற தன்மை மற்றும் குறைந்த சம்பளம் ஆகிய காரணங்களை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் என்பது ஐரோப்பா கண்டம் முழுவதும் வலுத்துள்ளது. இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் இந்தப் போராட்டம் தொடர்கிறது. "ஐந்து இடங்களில் ஒருநாள் முழுவதும் இந்தப் போராட்டம் நடைபெறும்" என தொழிலாளர்கள் அறிவித்தனர்.
ஜிஎம்பி அமைப்பின் பொதுச்செயலாளர் டிம் ரோச்சே அளித்துள்ள அறிக்கையில் ''அமேசானில் வேலை பார்ப்பவர்கள் மனித்தன்மையற்று நடத்தப்படுகிறார்கள். அமேசான் தொழிலாளர்களின் எலும்பை உடைத்து, ஆம்புலன்ஸில் ஏற்றி எனுப்பிக் கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
இந்த வருட ஆரம்பத்தில் தகவல் அறியும் சட்டத்தின் படி அமேசானில் மட்டும் கடந்த மூன்று வருடங்களில் 600 முறை ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டுள்ளது என்கின்றனர். இதனை அமேசான் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
600க்கும் மேற்பட்டவர்கள் ஜெர்மனியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கு அவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 12 அமெரிக்க டாலர் என்ற அளவில் சம்பளம் வழங்கப்படுகிறது. ஸ்பெயினில் அமேசானின் அதிபட்ச விற்பனை நடக்கும் நாளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்படி செய்தால் தான் நிறுவனம் எங்கள் மீது கவனம் செலுத்தும் என்று கூறியுள்ளனர். இதேபோன்ற செயலை சென்ற மே மாதமும் செய்துள்ளனர்.
#AmazonWeAreNotRobots என்ற ஹேஷ்டேக் மூலம் அமேசானுக்கு எதிரான போராட்டத்தை சமூக வலைதளங்களிலும் செய்து வருகின்றனர்.
இதற்கு பதிலளித்துள்ள அமேசான் '' நாங்கள் ஐரோப்பாவில் 27 பில்லியன் யூரோ முதலீடு செய்துள்ளோம், 75,000 நிரந்தர வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளோம். இவை அனைத்துமே அதிக திறன் கொண்ட வேலைகள், நல்ல பயிற்சிகளுடன் அதிக சம்பளத்தில் தான் இந்த வேலைகளை வழங்கியுள்ளோம். பாதுகாப்பான பணியிடமாக தான் அமேசான் திகழ்கிறது" எனக்கூறி தொழிலாளர்களின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)