பில் கேட்ஸை முந்தி நவீன யுகத்தின் மிகப் பெரிய செல்வந்தராக உயர்ந்துள்ளார் அமேசான் இணைய வர்த்த நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் ஃபெசோஸ்.
இணைய வர்த்தகத்தின் அத்தனை சாத்தியங்களையும் திறந்துவிட்ட நிறுவனம் அமேசான். உலகில் பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் மட்டுமின்றி மூன்றாம் உலக நாடுகளிலும் அமேசான் இணைய வர்த்தகம் செழித்தோங்கி வருகிறது. இதனால், உலகின் அத்தனை பணக்காரர்களையும் பின்னுக்குத் தள்ளி நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார் ஃபெசோஸ்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் வெளியிட்ட செய்திபடி, அமேசான்.காம் நிறுவனத்தின் தலைவர் ஃபெசோஸின் மொத்த சொத்த மதிப்பு 155 பில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஓனர்களில் ஒருவரான பில் கேட்ஸின் சொத்து மதிப்பு, ஃபெசோஸ் சொத்தைவிட 55 பில்லியன் டாலர்கள் குறைவாகும்.
1999 ஆம் ஆண்டில் இணையதள சந்தை விரிவடைந்த போது கேட்ஸ், முதன்முறையாக 100 பில்லியன் டாலர்களுக்குச் சொந்தமானார். தற்போது சந்தை நிலவரத்தை வைத்துக் கணக்கிட்டால், அது 149 பில்லியன் டாலர்களுக்கு ஒப்பானதாக இருக்கும். பில் கேட்ஸ் தனது சொத்துகளை கையில் வைத்தும், சந்தையில் தீவிரமாக இருந்திருப்பாரேயானால், ஃபெசோஸைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் நீடித்திருப்பார். ஆனால், அவரின் பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் அறக்கட்டளை நிறுவனத்துக்கு, பில் கேட்ஸ் நிறைய சொத்துகளை எழுதி வைத்துவிட்டார். 1996 ஆம் ஆண்டிலிருந்து கேட்ஸ், 700 மில்லியன் மைக்ரோசாஃப்ட் பங்குகளை விற்றுவிட்டார். மற்றும் 2.9 பில்லியன் டாலர்களை தானமாக கொடுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபெசோஸின் சொத்து மதிப்பு கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 52 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. இது ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக முடிசூடியுள்ள முகேஷ் அம்பானியின் மொத்த சொத்த மதிப்பைவிட அதிகம் என்று கூறப்படுகிறது.
ஃபெடரல் ரிசர்வ் அமைப்பின் அறிக்கைப்படி, அமெரிக்காவில் இருக்கும் 1 சதவிகித பணக்காரர்கள் தான், அந்நாட்டில் இருக்கும் 38.6 சதவிகித சொத்துகளை கட்டுப்படுத்துகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல ஆக்ஸ்ஃபாம் இன்டர்நேஷனல் அமைப்பின் அறிக்கையில், உலகின் 80 சதவிகித வருவாய் 1 சதவிகித பணக்காரர்களுக்கு செல்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)