ஹைலைட்ஸ்
- மகாராஷ்டிர அரசு, மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக்கிற்குத் தடை விதித்துள்ளது
- ஜூன் 23-ம் தேதி இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
- இந்தத் தடையால் பெரு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்
Mumbai: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 23 ஆம் தேதி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையால் பெரு நிறுவனங்கள் பல திணறி வருவதாக கூறப்படுகிறது. மேலும் பல நிறுவனங்களில் அதிகாரமட்டம், மகாராஷ்டிர அரசிடம் சில விதி விலக்குகள் கொடுக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்தியாவிலியே முதன் முறையாக ஒரு மாநிலம் முழுக்க பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கும் நடைமுறையை மகாராஷ்டிர மாநில அரசு கடந்த 23 ஆம் தேதி அமல்படுத்தியது. இந்தத் தடையின் மூலம் பிளாஸ்டிக் பைகள், உணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் கன்டெய்னர்கள், ஸ்பூன்கள், ஃபோர்க்குகள், டம்ளர்கள் மற்றும் பொருட்களுக்கு மேல் மூட பயன்படும் பிளாஸ்டிக் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையால் பெரு நிறுவனங்கள் பல திணறி வருவதாக தகவல். குறிப்பாக அமேசான், பெப்ஸி, கோக், ஹெச் அண்டு எம் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தத் தடையால் உற்பத்தி மற்றும் பேக்கிங் தொகை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மகாராஷ்டிர அரசிடம், ‘இந்த விதிமுறைகளில் சில விலக்குகள் வேண்டும். எங்கள் தரப்பில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வேறொரு பொருளை சீக்கிரமே பயன்படுத்த ஆரம்பித்து விடுவோம். அதுவரை தளர்வு கொடுக்கப்பட வேண்டும்’ என்று கோரியுள்ளதாம்.
பிளாஸ்டிக் மூலம் செய்யப்படும் பேக்கிங்கால் தான் உலகில் பாதியளவு பிளாஸ்டிக் குப்பை சேர்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்நிலையில், இந்த பெரிய நிறுவனங்கள் பெரும்பான்மையானவற்றுக்கு பிளாஸ்டிக் பேக்கிங் என்பது அவசியமாக இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய பிளாஸ்டிக் பை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் நீமித் புனாமியா, ‘ஒரு நல்ல மாற்றுக்கு எங்கள் துறைக்கு 7 ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்குமாறு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இது ஒரே நாளில் மாற்றக்கூடிய விஷயம் அல்ல’ என்று தங்கள் தரப்பு நியாயம் குறித்து கருத்து கூறியுள்ளார்.
மகராஷ்டிராவின் சுற்றுச்சூழல் அமைச்சரோ, ‘மளிகை கடைகளுக்கு அருகாமையில் வசிக்கும் நபர்களுக்கு பிளாஸ்டிக் மூலம் பொருட்களைத் தர அனுமதியளிக்கப்படும். அந்த பிளாஸ்டிக்கையும் கடைகள் திரும்ப பெற்றிருக்க வேண்டும்’ என்று கூறி, இதற்கு மேல் விதிகளில் சமரசம் செய்யப்படாது என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், பெரு நிறுவனங்கள், மகாராஷ்டிர அரசின் உயர்மட்டத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை, அரசு துறை சார்ந்த பலரே ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும், அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கூறுகின்றனர்.
2022 ஆம் ஆண்டுக்குள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.