அமேசான் நிறுவனம் உலகம் முழுவதும் பிரைம் டே விற்பனையை நேற்று தொடங்கியது. பல அதிரடி ஆஃபர்களை அறிவித்திருந்தது அமேசான். பெரிய அளவிலான விற்பனை இந்த 36 மணி நேர சிறப்பு விற்பனையின் போது நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று விற்பனை தொடங்கியதும் அதன் இணையதளம் கிராஷ் ஆனது. அதே நேரம், ஸ்பெயினில் உள்ள அமேசான் கிளையில் கிட்டத்தட்ட 1,800 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரோக்கியமான பணியிடம், ஊதிய உயர்வு மற்றும் மருத்து உதவிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தொழிலாளர் யூனியன் சார்பில் முன்னின்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் இணையதள முடக்கம் மற்றும் வேலை நிறுத்த போராட்டம் நடந்ததால், அமேசான் பிரைம் டே விற்பனை ஸ்தம்பித்தது. இதே போல இன்று ஜெர்மனியில் உள்ள அமேசான் நிறுவன ஊழியர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.
“ அமேசான் நிறுவனம் நன்றாக பணம் சம்பாதிக்கிறது. ஆனால் ஊழியர்களின் மருத்துவ உதவிகளில் மிச்சம் பிடிக்கிறது” என்று வெர்டி என்ற யூனியன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
“இந்த பிரச்சனைகளால் இந்த அமேசான் பிரைம் டே விற்பனையில் நிச்சயம் பாதிப்பு இருக்கும்” என்று குளோபல் டேட்டா ரீடெய்ல் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த நீல் செளண்டர்ஸ், கூறியுள்ளார். மேலும் “ இது வாடிக்கையாளர்களை எரிச்சலூட்டும் விதமாக இருந்திருக்கும்” என்றும் அவர் கூறினார்.
அமேசான் நிறுவனத்துக்கும் அதன் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்கும், தொழிலாளர் யூனியனுடன் எப்போதும் கருத்து மோதல் இருந்து கொண்டே தான் இருந்திருக்கிறது. பெசோஸின் பத்திரிக்கை நிறுவனமான வாஷிங்டன போஸ்ட் நிறுவன ஊழியர்களுடனும் 14 மாதங்கள் நீடித்த பிரச்சனை அண்மையில்தான் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் யூனியன்களை வளர விடாமல் செய்ய நினைக்கும் அமேசானால், ஐரோப்பாவில் அதை செய்ய முடியவில்லை. அங்கு யூனியன் கட்டமைப்புகள் வலுவாக இருப்பதால், தொழிலாளர் உரிமைக்காக யூனியன்கள் முன் நிற்கின்றன. கடந்த நவம்பர் மாதம் இத்தாலி மற்றும் ஜெர்மனியில் உள்ள அமேசான் ஊழியர்கள் தங்களை பல குறைந்த நேரத்தில், அதிக வேலை செய்ய கட்டாயப்படுத்துவதாக வேலை நிறுத்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“நாங்கள் ஆரோக்கியமான பணியிடத்தை உருவாக்கவே உழைத்து வருகிறோம், நாங்கள் ஊழியர்களின் பிரச்சனைகளை கேட்க எப்போதுமே தயாரகத்தான் இருக்கிறோம் “ என அமேசானின் செய்தி தொடர்பாளர் மெலனி எட்சஸ் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு பிரைம் டே விற்பனையில் 3.4 பில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 2.4 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஆனால், தீடீரென் ஏற்பட்டுள்ள இந்த குளறுபடிகளால், அந்த இலக்கை அடைய முடியுமா என்பது சந்தேகமே.
(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)