This Article is From Aug 26, 2019

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு

அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையையும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் உடைத்தனர். தொடர்ந்து கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. போலீஸ் நிலையம் மீதும் போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டன.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை நேற்று மாலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. வேதாரண்யம் அருகே இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் வலுத்துள்ளதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

வேதாரண்யம் அருகே உள்ள ராஜாளிக்காட்டில் இருந்து ஜீப்பில் ஒருவர் நேற்று மாலை வேதாரண்யத்துக்கு வந்தார். வேதாரண்யம் போலீஸ் நிலையம் எதிரே வந்தபோது ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது24) என்பவர் மீது ஜீப் எதிர்பாராதவிதமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் காயத்துடன் கிடந்த அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த விபத்து காரணமாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் போலீஸ் நிலையம் எதிரே நின்று கொண்டிருந்த அந்த ஜீப்புக்கு திடீரென தீ வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வலுத்து, வன்முறையாக மாறியது.

அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையையும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் உடைத்தனர். தொடர்ந்து கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. போலீஸ் நிலையம் மீதும் போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டன. ஜீப்புக்கு தீ வைப்பு, அம்பேத்கர் சிலை உடைப்பு, போலீஸ் நிலையம் மீது கல்வீச்சு என அடுத்தடுத்து நடந்த வன்முறை சம்பவங்களால் வேதாரண்யம் போலீஸ் நிலையம் அமைந்துள்ள பகுதி ஒரே பரபரப்பாக காட்சி அளித்தது.

அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

.