மாயாவதி, இந்த முறை சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார்.
New Delhi: நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததைத் தொடர்ந்து நடந்த கருத்துக் கணிப்புகளில், பாஜக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜக-வுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்னும் பட்சத்தில் என்ன செய்யலாம் என்பதை முன் வைத்து பல எதிர்க்கட்சித் தலைவர்கள் காய் நகர்த்தி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு தலைவர், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை நேரில் சென்று கூட்டணி குறித்துப் பேசியுள்ளார். அப்போது அவர், தனக்குப் பிரதமர் ஆகும் ஆசை இருப்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
“என்னை பிரதமராக யார் முன் மொழிகிறார்களோ அவர்களுக்குத்தான் என் ஆதரவு” என்று தன்னை சந்தித்த அந்த தென்னிந்திய முக்கிய புள்ளியிடம் மாயாவதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளராம்.
பாஜக-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரள வேண்டுமென்றால், ‘பிரதமர் வேட்பாளர்' சிக்கலை தீர்த்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மாயாவதி, இந்த முறை சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார்.
சில நாட்களுக்கு முன்னர் பேசிய மாயாவதி, “லோக்சபா தேர்தலில் நான் போட்டியிட வேண்டிய சூழல் வரலாம்” என்றும் பேசி பரபரப்பைக் கூட்டினார்.
அதேபோல இந்த ஆண்டுத் தொடக்கத்தில், “நான் லோக்சபா தேர்தலில் இப்போது போட்டியிடவில்லை என்பதை அறிந்து கவலைப்பட வேண்டாம். நான் முதல்முறையாக 1995 ஆம் ஆண்டு உத்தர பிரதேச முதல்வர் ஆனேன். அப்போது நான் சட்டமன்ற உறுப்பினராக இல்லை. அதேபோல பிரதமர் பதவி ஏற்ற 6 மாதங்களில் எம்.பி ஆனால் போதும் என்று நடைமுறை உள்ளது” என்று சூசகமாக ட்வீட்டினார்.
அகிலேஷ் யாதவும், “மாயாவதி பிரதமர் ஆக ஆதரவு கொடுப்பேன்” என்று பல முறை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.