ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி தீர்மானம்
திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த நேரத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதனால் பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நவ.10ஆம் தேதி நடைபெறும் என்று திமுக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று காலை 10 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், 3,000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், முக்கிய 10 தீர்மானங்களாக, திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம், திமுக அமைப்புத்தேர்தலை அடுத்த ஆண்டுக்குள் நடத்தி முடிப்பது என தீர்மானம், உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிக்க அங்கீகாரம் என தீர்மானம்.
திமுக இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 35 வரை நிர்ணயித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம். வெளிநாடுவாழ் இந்தியர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம், வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைக்கப்படும் என தீர்மானம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி தீர்மானம் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து, பொதுச்செயலாளருக்கு இருந்த அதிகாரம் கூடுதலாக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் இருந்து வருகிறார். வயது மூப்பு மற்றும் உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இதனால், பொதுச் செயலாளர் க.அன்பழகனின் அதிகாரம் திமுக தலைவர் ஸ்டாலினுக்குத் தரப்பட்டது. இனி, திமுக நிர்வாகிகள் சேர்க்கை, நீக்கம் தொடர்பான அறிக்கைகளில் ஸ்டாலின் கையெழுத்திடலாம். இதற்கேற்ப திமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.