துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து மார்க் சியல்லா தகவல் திரட்டியுள்ளார்.
Chennai: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் மார்க் சியல்லா ஆவணப்படம் தயாரித்து வருகிறார். அவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று போலீசார் அவரை வலியுறுத்தியுள்ளனர்.
நேற்று அவரை விசாரித்த போலீசார், அவரிடம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவது குறித்து கேள்வி எழுப்பினர். கடந்த டிசம்பர் 27-ம்தேதி சியல்லா டூரிஸ்ட் விசாவில் இந்தியா வந்துள்ளார். அவர் விசா விதி மீறல் செய்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
சியல்லாவிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா, NDTVக்கு அளித்த பேட்டியில், ''விசா தொடர்பான விதிகளை மார்க் சியல்லா மீறியுள்ளார். தற்போது அவர் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆவணப்படத்தை உருவாக்கி வருகிறார். அவர் ஐதராபாத் வழியாக வெளிநாடு செல்வார். அவர் சந்தித்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களிடம் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நடந்த போராட்டத்தின்போது தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்பின்னர், ஆலை சுற்றுச் சூழலுக்கு எதிரானது என்று கூறி அதனை இழுத்து மூடுவதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகமும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசும் வழக்கு தொடர்ந்திருக்கின்றன.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை சுட்டிக்காட்டி, ஸ்டெர்லைட் ஆலை இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு மாநில சுற்றுச் சூழல் கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.