கொரோனா வைரஸ்: இந்தியா வெறும் 1.5-2.8 சதவீத வளர்ச்சியைக் காணும் என்று உலக வங்கி கணித்துள்ளது (கோப்பு)
New Delhi: தேசிய அளவில் கொரோனா தொற்றால் 9,000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், தற்போது நடைமுறையில் இருக்கும் முழு முடக்க நடவடிக்கை(LOCKDOWN) போன்ற காரணத்தினால் மத்திய அரசு திட்டமிட்டுள்ள நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளில் மூன்றினை நிர்வாக ரீதியாக அறிவிப்பதற்கு மத்திய அரசு தாயாராகி வருகின்றது.
முன்னதாகவே தொழில் உறவுகள் 2020 மசோதா என சட்டத் தொகுப்புகள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு சட்டத் தொகுப்புகளில் முதலாவதான - குறைந்தபட்ச ஊதியங்கள், போனஸ், சம ஊதியம் போன்றவை தொடர்பான சில சட்டங்களை ஒன்றிணைக்கும் ஊதியங்கள் குறித்த சட்டத் தொகுப்பு ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் மற்ற மூன்றையும், விவாதங்களுக்கு உட்படுத்தாமல் நிர்வாக ரீதியாக நடைமுறைக்குக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருக்கின்றது,
சமூகப் பாதுகாப்பு குறியீடானது வருங்கால வைப்பு நிதி, காப்பீடு, மகப்பேறு சலுகைகள் மற்றும் பிறவற்றை உள்ளடக்கியது. தொழில்துறை மோதல்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பிறவற்றின் சட்டங்களை இணைக்கும் தொழில்துறை உறவுகள் சட்டத் தொகுப்பு, மற்றும் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் நலன்புரி சட்டங்கள் சம்பந்தப்பட்ட தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்புக் சட்டத் தொகுப்பு ஆகிய மூன்றும் தற்போது நிலுவையில் உள்ளவையாகும்.
கடந்த ஜூன் மாதத்தில் அந்நிய மூலதனத்தினை பெருமளவுக்கு ஈர்க்க, அதாவது வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகம் மேற்கொள்ள 40 இந்திய தொழிலாளர் நல சட்டங்களை வெறும் நான்காக வெட்டி சுருக்கியது மத்திய அரசு. அப்போதைய பொருளாதார மந்த நிலையை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டாலும், தொழிலாளர்களின் நலனை வெட்டி சுருக்குவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.
ஏற்கெனவே இருந்த பொருளாதார மந்த நிலையோடு கொரோனா நெருக்கடியும் புதிய மந்த நிலையை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் முன்னதாக 4.8-5.0 என்கிற அளவில் இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதம், இந்த ஆண்டில் வெறும் 1.5-2.8 என்கிற அளவில்தான் இருக்கும் என உலக வங்கி வரையறுத்துள்ளது.
முன்னதாக மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த நெருக்கடியான நேரத்தில் பொருளாதாரத்தையும், மனித உயிர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதே நேரத்தில் இந்த முழு முடக்க நடவடிக்கை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிப்பதற்கான சாத்தியங்கள் மற்றும், இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் துறைகள் குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் இதர குறிப்பிட்ட மருந்து உற்பத்தி மட்டுமே தற்போது மிகுந்த அழுத்தத்தோடு இயங்கி வருகின்றது. மற்ற அணைத்து துறையும் முற்றிலுமாக முடங்கியுள்ளன. அதை மையமாகக் கொண்ட விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரம் சிதைந்துள்ளது.
கொரோனாவுக்கு முந்தைய காலகட்டம், கொரோனாவுக்கு பிந்தைய நிலை என வரவிருக்கும் மாற்றங்கள் குறித்து மோடி, அரசியல் தலைவர்கள் சந்திப்பில் சமூக மற்றும் தனிப்பட்ட மாற்றங்கள் ஏற்பட வேண்டியிருக்கும் என சூசகமாக கூறியுள்ளார்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தொழில் உறவுகள் 2020 மசோதா, தொழிலாளர்களின் வேலை நேரத்தினை அரசுகள் தங்கள் விருப்பத்திற்கு மாற்றிக்கொள்ளலாம் என்கிற விதிகளையும் உள்ளடக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.