கொரோனா வைரஸ்: நீட்டிக்கப்பட்ட COVID-19 பூட்டுதலுக்கு மத்தியில் புலம்பெயர்ந்தோர் சிறப்பு ரயிலைப் பிடிக்க காத்திருக்கிறார்கள்
New Delhi: தேசிய அளவில் ஒட்டு மொத்தமாக இதுவரை 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் துவங்க மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்திருந்து. இந்த நிலையில் முழு முடக்க (LOCKDOWN) நடவடிக்கையில் அமல்படுத்தப்பட்ட தளர்வுகளில் மேலெழும் சிக்கல்களை சமாளிக்க மத்திய அரசு ஒரு திட்டத்தினை வகுத்து வருகிறது. அடுத்த இரண்டு மாதத்திற்கான திட்டத்தினை தயாரிக்க முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு அமைச்சகமும் தனது துறைகளின் செயல்பாடுகள் குறித்த செயல்திட்டத்தினை உருவாக்கி வருகின்றன. இது பிரதமர் நரேந்திர மோடியின் நேரடிப் பார்வையில் நடைபெறுவதக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முழு முடக்கம் தொடங்கப்பட்ட மார்ச் 24-ம் தேதியிலிருந்து தற்போது வரை மத்திய அரசின் அமைச்சகங்கள் தங்கள் துறைகளில் மேற்கொண்ட பணிகள் குறித்த விரிவான அறிக்கையை தயார் செய்து கொடுக்க மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
முழு முடக்க காலகட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சில தருணங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால், முன்னர் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும், தற்போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கையானது மத்திய அரசுக்கு ஒரு மதிப்பீட்டினை வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் மாதம் தொடங்கிய முழு முடக்க நடவடிக்கைக்கு மத்திய அரசு மக்களுக்கு 1.70 லட்சம் கோடி ரூபாயில் சில சலுகைகளை அறிவித்திருந்தது. ஆனால், முழு முடக்க நடவடிக்கையின் காரணமாக பாதிப்புக்கு உள்ளான சிறு குறு தொழில்கள் குறித்து எவ்வித சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை. கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தினை மதிப்பீடு செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஒரு குழுவை பிரதமர் அமைத்துள்ளார்.
முன்னர் அறிவித்த திட்டங்கள் குறித்தும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் செயல் முறைகள் குறித்த விவரங்கள், இனி மீண்டும் முழு முடக்க நடவடிக்கை அமல்படுத்தப்படும்பட்சத்தில் மத்திய அரசுக்கு இந்த விவரங்கள் பெரிய அளவில் உதவும். இதற்கான நடவடிக்கைகளை, புலம் பெயர் தொழிலாளர்களுக்கான சிக்கல் மத்தியிலும் மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.
மத்திய அரசு அமல்படுத்திய முழு முடக்க நடவடிக்கையானது தொற்று பரவலின் விகிதத்தினை குறைத்துள்ள போதிலும், மத்திய அரசானது தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது என விமர்சனங்களை எதிர்க் கட்சிகள் முன்வைத்திருந்தன. இந்த நிலையில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கான பிரச்சனை மேலெழுந்தது.
மத்திய அரசு புலம் பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் சேவைகளுக்கு கட்டணங்களை வசூலித்த காரணத்தினால் மாநில அரசுகள், கட்டணங்களை மத்திய அரசே ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்தன. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, புலம் பெயர் தொழிலாளர்களுக்கான கட்டணங்களை காங்கிரஸ் மத்திய அரசுக்கு செலுத்தும் என அதிரடியாக அறிவித்தார். பின்னர் மத்திய அரசு, புலம் பெயர் தொழிலாளர்களுக்கான கட்டணத்தில் 85 சதவிகிதத்தினை ரயில்வே அமைச்சகம் செலுத்தும் என கூறியது. மீதமுள்ள கட்டணங்கள் மாநில அரசுகளிடமிருந்து வரும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.