பல எதிர்க்கட்சித் தலைவர்களும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஹைலைட்ஸ்
- காங்கிரஸ், தேர்தல் ஆணையத்தை விமர்சித்து வருகிறது
- அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார் பிரணாப் முகர்ஜி
- ராகுல் காந்தி நேற்று, தேர்தல் ஆணையத்தை ட்விட்டர் மூலம் விமர்சித்தார்
New Delhi: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, லோக்சபா தேர்தலை மிகச் சிறப்பாக நடத்தி முடித்ததற்கு தேர்தல் ஆணையத்துக்குப் பாராட்டுகள் என்று கருத்து தெரிவித்துள்ளார். அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி உட்பட, எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை கேள்விக்கு உள்ளாக்கி வரும் நிலையில், பிரணாப் இப்படி பேசியுள்ளார்.
“ஒர் அரசு அமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று நாம் நினைத்தால், இந்த நாட்டில் அரசு அமைப்புகள் முன்னரே நன்றாக செயல்பட்டு வந்ததை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்றால், அதற்கு காரணம் தேர்தல்களை ஒழுங்காக நடத்திய தேர்தல் ஆணையத்தினால்தான். தேர்தல் ஆணையர் சுகுமார் சென் முதல் தற்போது இருக்கும் தேர்தல் ஆணையர் வரை, அனைவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களை நாம் விமர்சிக்க முடியாது. இந்த முறையும் தேர்தல்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன” என்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
அவர் மேலும், “அரசு அமைப்புகள் அனைத்தும் நன்றாகத்தான் உள்ளன. பல ஆண்டுகளாக இந்த அரசு அமைப்புகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன” என்றும் தெரிவித்தார்.
பிரணாப் முகர்ஜி, முன்னர் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின், நிதி அமைச்சராக இருந்தார். அதைத் தொடர்ந்து அவர், 2012 ஆம் ஆண்டு, நாட்டின் 13வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். “இந்த முறை 67.3 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். இது நமக்கிருக்கும் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதிக்கும் மேலானதாகும். இது நல்ல விகிதாச்சாரம் ஆகும். வெகு நாள் கழித்து, குடிமகனாக நானும் வாக்களித்தேன்” என்றும் கூட்டத்தின் போது பேசினார் பிரணாப்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று, “தேர்தல் பத்திரங்கள் முதல் ஈ.வி.எம் கோளாறுகள் வரை, தேர்தல் அட்டவணை, நமோ டிவி, மோடி ஆர்மி, கேதார்நாத்தில் டிராமா என ஒவ்வொரு விஷயத்திலும் தேர்தல் ஆணையம் மோடி மற்றும் அவரது கேங் முன்பு பணிந்துவிட்டது. இது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. தேர்தல் ஆணையம் என்பது அனைவரும் பார்த்து அச்சப்படும் வகையிலும் மதிப்பு மிக்கதாகவும் இருந்தது. இனிமேல் அப்படி இருக்காது” என்று தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை விமர்சித்த நிலையில், பிரணாப் முகர்ஜி, அதற்கு நேரெதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
பல எதிர்க்கட்சித் தலைவர்களும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.