This Article is From Jan 20, 2020

தலைநகர் மாற்றம்: ஆந்திராவில் 3 நாள் சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!

கடந்த 5 வாரங்களாக அமராவதியில் உள்ள 29 கிராமங்களிலும், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் மாநில அரசின் முடிவுக்கு எதிரான இந்த போராட்டம் நடந்து வருகிறுது

ஆந்திர தலைநகரை அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு மாற்ற ஜெகன்மோகன் ரெட்டி அரசு முடிவு.

Amaravati, Andhra Pradesh:

ஆந்திர மாநில சட்டசபையின் மூன்று நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று கடும் பாதுகாப்புக்கு இடையே தொடங்க உள்ளது. ஏற்கனவே தலைநகர் அமராவதியை மாற்றும் திட்டத்திறக்கு எதிராக மாநிலம் முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வரும் நிலையில், இன்று சட்டப்பேரவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. 

சட்டசபை செல்லும் பாதைகள் அனைத்தும் கடுமையான பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தலைநகரில் கூட்டமாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்றைய தினம் சிபிஐ மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர், மாநில அரசுக்கு எதிராக சட்டசபை நோக்கி பேரணி செல்ல அழைப்பு விடுத்துள்ளனர். 

கடந்த 5 வாரங்களாக அமராவதியில் உள்ள 29 கிராமங்களிலும், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் மாநில அரசின் முடிவுக்கு எதிரான இந்த போராட்டம் நடந்து வருகிறுது. 

ஆந்திராவின் தலைநகரை மாற்ற விரும்பிய ஜெகன்மோகன் ரெட்டி, அரசு நிர்வாகத்துக்கு விசாகப்பட்டினம், சட்டமன்றத்துக்கு அமராவதி, நீதித்துறைக்கு கர்னூல் என 3 தலைநகரங்களை உருவாக்க முடிவு செய்தார்.

அதன்படி மாநிலத்தின் தலைநகரை மாற்றுவது தொடர்பாக பரிந்துரைகளை அளிப்பதற்கு 2 குழுக்களை அவர் அமைத்தார். இந்த குழுக்கள் தங்கள் அறிக்கையை முதல்வரிடம் அளித்துவிட்டன. இந்த அறிக்கைகளை அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்று ஆய்வு செய்து ஜெகன்மோகன் ரெட்டியிடம் அறிக்கை அளித்துள்ளது.

இதைத்தொடர்ந்து மாநில தலைநகரை அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு மாற்ற ஜெகன்மோகன் ரெட்டி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மசோதா ஒன்றை அரசு உருவாக்கி உள்ளது. இதை நிறைவேற்றுவதற்காக சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் இன்று முதல் 3 நாட்களுக்கு நடக்கிறது.

முன்னதாக இன்று காலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அதில் இந்த மசோதாவுக்கு முறைப்படி ஒப்புதல் வழங்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஆளுநரின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்படும். அவரது ஒப்புதல் பெற்று சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

175 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர சட்டசபையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு 151 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் மசோதா எளிதில் நிறைவேறி விடும் என தெரிகிறது.

இதற்கிடையே ஆந்திராவின் தலைநகரை மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. முதல்வரின் இந்த முடிவை எதிர்த்து மாநிலம் முழுவதும் இன்று போராட்டமும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தெலுங்குதேசம் கட்சியும் ஆதரவு தெரிவித்து உள்ளது.

தலைநகரை மாற்றும் நடவடிக்கைக்கு முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். 

.