பாஜகவின் நிஷிகாந்த் துபே, சஷி தரூரை நாடாளுமன்றக் குழுவிலிருந்து நீக்க அழைப்பு விடுத்துள்ளார்.
New Delhi: சமீப காலமாக பேஸ்புக் தளத்தில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வருவதாக பல கருத்துக்கள் மேலெழுந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக வெளிநாட்டு ஊடகங்களில் பேஸ்புக் தளத்தினை பாஜக கைப்பற்றியுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் சமூக ஊடக தளத்தில் அனுமதிக்கப்பட்ட பாஜக மற்றும் வலதுசாரி தலைவர்களிடமிருந்து இடையூறு விளைவிக்கும் உள்ளடக்கம் தொடர்பாக பேஸ்புக் பிரதிநிதிகள் நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்பத்திற்கான நிலைக்குழுவை சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தலைமையிலான குழு செப்டம்பர் 2 ம் தேதி பேஸ்புக் பிரதிநிதிகளைக் சந்திக்கும். முன்னதாக நாடாளுமன்ற நிலைக்குழு தலைவரான சசி தரூரை பதவி விலக வேண்டும் என்று பாஜக எம்.பிக்கள் கோரியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
நிலைக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடாமல் பேஸ்புக் குழுவுடன் கலந்துரையாடலை மேற்கொள்ள தனது விருப்பத்தை ட்வீட் செய்ததன் மூலம் தரூர் விதிகளை மீறியதாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
“குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் சமூக / ஆன்லைன் செய்தி ஊடக தளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது என்ற தலைப்பில் பேஸ்புக் பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்க கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுவதாக” இன்று மாலை அனுப்பப்பட்ட மக்களவை செயலகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, ராகுல் காந்தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிக்கையை ட்வீட் செய்த பின்னர், சசி தரூர், “தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு நிச்சயமாக இந்த அறிக்கைகள் மற்றும் இந்தியாவில் பேஸ்புக் தளங்களில் பரப்பப்பட்டு வரும் வெறுப்புணர்வு பற்றி பேஸ்புக் தளத்திடம் கேள்வி எழுப்ப விரும்புகின்றது.” என பதிவிட்டிருந்தார்.
இந்த குழு, "குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் சமூக / ஆன்லைன் செய்தி ஊடக தளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது" என்ற தலைப்பில் சாட்சியத்தை பரிசீலிக்கும் என்று அவர் கூறியிருந்தார்.
தரூரின் இந்த கருத்துக்கு பாஜக எம்.பி துபே, “தரூர் பதவி விலக வேண்டும் என்றும், அவர் விதிகளை மீறுவது மட்டுமல்லாமல் காங்கிரஸ் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுவதாகவும்” குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.