This Article is From Sep 02, 2018

குறித்த தேதிக்கு முன்னதாகவே தேர்தல்; நலத்திட்டங்களை வாரி வழங்கும் தெலுங்கானா முதல்வர்!

சந்திரசேகர் ராவ் அவர்கள் தெலுங்கானா மாநில விவசாயிகளுக்கான காப்பீட்டு திட்டத்தையும் அறிவித்துள்ளார்

Hyderabad:

ஹைதராபாத்: அறிவிப்பு வருமா, இல்லையா என்பதே இப்பொழுது எல்லோரது மனதிலும் இருக்கும் கேள்வியாகும். அமைச்சரவை கூட்டத்திற்கு முன் நடக்கவிருக்கும் பேரணியால், குறித்த தேதிக்கு முன்னதாகவே தேர்தல் நடக்கும் என்கிற அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபையை கலைத்துவிட்டு முன்னதாகவே தேர்தல் நடத்துவது குறித்து முதலமைச்சர் K.சந்திரசேகர் ராவ் அறிவிக்கக்கூடும் என தெரிகிறது.

இப்பேரணியில் அப்படி எந்த அறிவிப்பும் வராவிடினும் கூட, எப்படியும் 2018ஆம் ஆண்டின் இறுதிக்குள் தேர்தலை நடத்த சந்திரசேகர் ராவ் ஆயத்தமாகியிருப்பது தெரிகிறது.

ரித்து பந்து எனப்படும் விவசாயிகள் முதலீட்டு ஆதரவுத் திட்டம் உட்பட, ஒவ்வொரு துறையிலுமே பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார் முதலமைச்சர். ரித்து பந்து திட்டத்தின் கீழ், ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு ஏக்கருக்கு 4000 ரூபாய் கிடைக்கும். நடவு காலத்திற்கு முன்னரே, மாநில அரசு இந்த பணத்தை விவசாயிகளுக்கு கொடுக்க முடியும். இந்த நலத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 12,000 கோடி ரூபாயில் ஏற்கனவே 6,000 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளை சென்றடைந்துள்ளது.

பக்கத்து மாநிலமான ஆந்திர பிரதேசத்தில், ஜூன் மாதத்தில், குடியிருப்பு வசதி திட்டத்தின் கீழ் தலித் மக்களுக்கான சலுகைகளையும், இலவச மின்சாரத்திற்கான அளவை 50 யூனிட்டிலிருந்து 100 யூனிட்கள் ஆக அதிகப்படுத்தியுள்ளார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. 2019ஆம் ஆண்டு தேர்தலில், எல்லா தொகுதிகளிலும் தனது கட்சி ஜெயிக்க வேண்டும் என முனைப்புடன் இருக்கிறார் சந்திரபாபு நாயுடு.

சந்திரசேகர் ராவ் அவர்கள் தெலுங்கானா மாநில விவசாயிகளுக்கான காப்பீட்டு திட்டத்தையும் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, விவசாய கடன் தள்ளுபடி தொகையையும் இரண்டு லட்சமாக உயர்த்துவது குறித்த அறிவிப்பும் இன்று வெளியாகக்கூடும். கடந்த சனிக்கிழமை அன்று, மின்சாரத்துறை ஊழியர்களுக்கு 35% சம்பள உயர்வினை அறிவிக்கையில், "மின்சாரத்துறை ஊழியர்களின் தேவைகளை நான் மறக்கவில்லை, அவர்களும் என்னை மறக்கக்கூடாது" என பேசியுள்ளார் முதலமைச்சர்.

மேலும் முதியவர்கள், விதவை பெண்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கான பென்சன் தொகையை உயர்த்தவும், வேலையில்லா பட்டதாரிகளுக்கான உதவித்தொகை மற்றும் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களுக்கான கடன் உதவித்தொகையை உயர்த்தும் திட்டங்களும் முதலமைச்சருக்கு உண்டு.

தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகத்தான், முதலமைச்சர் நலத்திட்டங்களை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டாமல் இல்லை.

இந்த புதிய நலத்திட்டங்களால், அரசுக்கு மொத்தம் 60,000 கோடி ரூபாய் செலவாகும் என தெரிகிறது. "இதனால் அரசுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்படும்" என சொல்கிறார் தெலுங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் உத்தம் குமார் ரெட்டி.

கடந்த சில நாட்களில், போலீஸ் சூப்பரிண்டன்ட் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை வெவ்வேறு பதவிகளில் இருந்த காவல் அதிகாரிகள் வெவ்வேறு மாவட்டங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்; தேர்தல் விதிமுறைகள் அமலான பின்பு, இது சாத்தியமில்லை என்பதால் இப்பொழுதே இந்த பணிமாற்றங்களையும் செய்துள்ளனர்.

நியூமராலாஜியில் அதிக நம்பிக்கை கொண்ட சந்திரசேகர் ராவ் அவர்களது ராசியான எண் 6 என்பதால், செப்டம்பர் 6ஆம் தேதி மிகப்பெரிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.

.