This Article is From Jun 26, 2018

அமெரிக்காவிலிருந்து வெளியேறும் ஹார்லி டேவிட்சன்… ஷாக் ஆன ட்ரம்ப்!

ஹார்லி டேவிட்சன் இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனம், அமெரிக்காவில் இருக்கும் தனது உற்பத்தி ஆலையை மூடப் போவதாக அறிவித்துள்ளது

அமெரிக்காவிலிருந்து வெளியேறும் ஹார்லி டேவிட்சன்… ஷாக் ஆன ட்ரம்ப்!

ஹைலைட்ஸ்

  • ட்ரம்ப் தலைமையிலான அரசு, உலக நாடுகளுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளது
  • இதனால், மற்ற நாட்டுப் பொருட்களுக்கு வரிவிதிப்பை அதிகரித்துள்ளது அமெரிக்கா
  • மற்ற நாடுகளும் அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகரித்து வருகிறது
Washington: அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஹார்லி டேவிட்சன் இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனம், அந்நாட்டில் இருக்கும் தனது உற்பத்தி ஆலையை மூடப் போவதாக அறிவித்துள்ளது. இது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ட்ரம்ப், மற்ற நாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தி வருகிறார். இதில் முக்கியமாக ஸ்டீல் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தியது கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளை கொதிப்படையச் செய்தன. இந்த வரி மாற்றத்தைத் திரும்ப பெறுமாறு அந்நாட்டு பிரதிநிதிகள் ட்ரம்பை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், ட்ரம்ப் விடாப்படியாக இருந்ததால், அந்நாடுகளும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பு அதிகரித்துள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க இரு சக்கர வாகனங்களுக்கு 6 சதவிகிதமாக இருந்த வரி விதிப்பு 31 சதவிகிதமாக ஆக்கப்பட்டுள்ளது. 

இதனால், அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு இழப்பு அதிகமானது. இதையொட்டி அந்நிறுவனம், ‘ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள வரி விதிப்புக்காக அமெரிக்காவில் இருக்கும் உற்பத்தி ஆலைகளில் வேலைகளை நிறுத்திவிட்டு, வேறு நாடுகளில் இருக்கும் ஆலைகளில் உற்பத்தியைப் பெருக்கப் போகிறோம். அது தான் ஐரோப்பாவில் இருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரே வழியாக இருக்கிறது. அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் நிலவி வரும் பிரச்னை சீக்கிரமே முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளது. 

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் உற்பத்தி ஆலைகள் இருக்கின்றன. தாய்லாந்தில் ஒரு உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கு அந்த நிறுவனம் முயன்று வருகிறது. ஆனால், எந்த உற்பத்தி ஆலையில் இரு சக்கரத் தயாரிப்பு அதிகரிக்கப்படும் என்பது குறித்து தெளிவு இல்லை. 

இந்த விவகாரம் குறித்து அதிபர் ட்ரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஹார்லி டேவிட்சன் முதல் நிறுவனமாக வெள்ளைக் கொடி காட்டியுள்ளது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. அவர்களுக்காக நான் அதிகமாக போராடினேன். அவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரி விதிக்காது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
.