ஹைலைட்ஸ்
- ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் மோதல் நிலவி வருகிறது
- இந்தியா, ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்ககூடாது, அமெரிக்கா
- அமெரிக்காவின் பேச்சை இந்தியா கேட்ககூடாது, ஈரான்
New Delhi: இந்தியாவுக்கு தொடர்ந்து கச்சா எண்ணெய் கிடைக்கும்படியான நடவடிக்கைகளை ஈரான் எடுக்கும் என்று அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இதையொட்டி, அமெரிக்கா, ‘ஈரானிடமிருந்து எங்கள் நட்பு நாடுகள் யாரும் எண்ணெய் வாங்கக் கூடாது. வரும் நவம்பர் 4 ஆம் தேதியுடன் ஈரானிடமிருந்து வாங்கும் எண்ணெயைய் உலக நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது இந்தியாவுக்கும் பொருந்தும்’ என்று எச்சரிக்கை விடுத்தது.
இந்தியா, இரண்டு நாடுகளுடனும் நட்புறவு கொண்டிருப்பதால், அமெரிக்காவின் இந்த கோரிக்கை இக்கட்டான சுழலில் இந்தியாவை நிறுத்தியுள்ளது.
இதையடுத்து நேற்று ஈரான் தூதரகம், ‘அமெரிக்காவுக்கு அடிபணிந்து ஈரானிடிமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டால், இதுவரை கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்படும்’ என்று கூறியது. இது டெல்லி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இன்று தூதரகம் அதிகாரபூர்வமாக, ‘இந்தியாவுக்கு எங்களிடமிருந்து எண்ணெய் கிடைப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. இந்தியாவுக்கு இருக்கும் இக்கட்டான சூழல் குறித்து ஈரான் புரிந்து கொள்கிறது. ஆனால், உலக அரசியல் சூழல், எண்ணெய் விலை, பிராந்திய உறவு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்தியா தான் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். இந்தியாவும் ஈரானும் சர்வதேச அளவில் பல விஷயங்களில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. அதனால், இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்குவது இரு நாட்டுக்கும் நல்லது’ என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த கூற்றுகள் பற்றி இந்திய அரசிடமிருந்து இதுவரை எந்த வித பதிலும் இல்லை. அமெரிக்காவின் கோரிக்கைக்கு இந்தியா செவி மடுக்குமா என்பதிலும் தெளிவில்லை.