This Article is From Feb 09, 2020

‘கருத்துக் கணிப்பு மிகத்துல்லியமானது அல்ல’ – டெல்லி சட்டமன்ற தேர்தல் குறித்து பாஜக கருத்து!!

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி 52 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கருத்துக் கணிப்பு மிகத்துல்லியமானது அல்ல’ – டெல்லி சட்டமன்ற தேர்தல் குறித்து பாஜக கருத்து!!

Delhi election: BJP is likely to get around 15 seats, predict exit polls

New Delhi:

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கருத்துக் கணிப்பு ஒன்றும் மிகத் துல்லியமானது அல்ல என்று பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் முடிந்த பின்னர் கருத்துக் கணிப்பு வெளியான நிலையில், டெல்லியில் பாஜக தலைவர்கள் அமித் ஷா தலைமையில் கூடி ஆலோசனை நடத்தினர்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் செய்தி தொடர்பாளர் மீனாட்சி லேகி, ‘கருத்துக் கணிப்பு முடிவுகள் ஒன்றும் துல்லியமானது அல்ல. மாலை 4 – 5 மணி நேரத்தின்போதுதான் தகவல்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் கருத்துக் கணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் தாமதமாகத்தான் வந்து, மாலை வரையில் வாக்களித்தனர். டெல்லியில் பாஜக ஆட்சியமைக்கும்' என்று தெரிவித்தார்.

முன்னதாக கடந்த புதன் அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, வாக்காளர்கள் காலை 10.30-க்கு முன்னதாகவே தங்களது குடும்பத்தினருடன் வந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ‘மக்களின் முடிவு என்னவாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். பிப்ரவரி 11-ம்தேதி வெளியாகும் தேர்தல் முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியை தரும்' என்று அவர் கூறியிருந்தார்.

நேற்று 5 நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தன. இதில் 56 இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  2015 தேர்தலில் அக்கட்சி 67 இடங்களில் வென்றிருந்தது. டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பெரும்பான்மை பெறுவதற்கு 36 இடங்களில் ஒரு கட்சி வென்றிருக்க வேண்டும்.

பாஜகவுக்கு 14 இடங்கள் வரை கிடைக்கலாம் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலமுறை, கருத்துக்கணிப்பு பொய்யாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களவை தேர்தலின்போது டெல்லியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி சார்பாக 70 மத்திய அமைச்சர்கள் 270 எம்.பி.க்கள்., பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், 40 நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வீதி வீதியாக சென்று பாஜகவுக்கு ஆதரவு திரட்டினர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் இரு தலைவர்களும் கடுமையாக விமர்சித்தனர்.

ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் மீதான கோபத்தை வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் பொத்தான்களை அமுக்குவதில் காட்ட வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூட்டம் ஒன்றில் பேசினார்.

நேற்று பாஜக ஆலோசனை நடத்தியதைப் போன்று ஆம் ஆத்மி தரப்பிலும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதில் ஓட்டு மெஷினுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு குறித்து முக்கியமாக பேசப்பட்டது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, தேர்தல் பிரசார ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாஜக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, பாஜக வெற்றி பெற்ற பின்னர் யாரும் வாக்குப்பதிவு எந்திரத்தை திட்டக் கூடாது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டில், ‘அனைத்து கருத்துக் கணிப்புகளும் பொய்யாகி விடும். எனது இந்த ட்விட்டர் பதிவை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 48 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைக்கும். அதன்பின்னர் வாக்குப்பதிவு எந்திரத்தை யாரும் விமர்சிக்க வேண்டாம்' என்று கூறியுள்ளார்.

.